ஒண்ணா…ரெண்டா…வீடு முழுக்க 4 ஆயிரம் கிலோ குப்பை: வீட்டு உரிமையாளருக்கு ஷாக் கொடுத்த வாடகைதாரர்…!!

Author: Rajesh
15 May 2022, 6:19 pm
Quick Share

லண்டன்: வீட்டை காலி செய்யும் முன் 4 ஆயிரம் கிலோ குப்பையை வாடகைதாரர் விட்டு சென்ற அதிர்ச்சியில் வீட்டு உரிமையாளர் உறைந்து விட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் நகரில் ஸ்வான்சீ பகுதியில் வானர்ல்வித் என்ற இடத்தில் உள்ள தனது வீடு ஒன்றை லீ லாக்கிங் என்பவர் வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் வசித்து வந்த வாடகைதாரர் வீட்டை காலி செய்துள்ளார். அவர் போகும்போது வீட்டு உரிமையாளரிடம், நான் கொடுத்த முன்பணம் 400 பவுண்டுகளை வீட்டை புதுப்பிக்க வைத்து கொள்ளுங்கள் என தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

இதன்பின் வீட்டு உரிமையாளரான லாக்கிங் தனது வீட்டை பார்க்க சென்றுள்ளார். ஆனால், வீட்டை நெருங்கும்போதே துர்நாற்றம் வீசியுள்ளது. எனினும், சொந்த வீடாயிற்றே. அதனால், உள்ளே நுழைய முயன்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் குப்பைகள் குவிந்து கிடந்துள்ளன. பழைய பொருட்கள், பழைய துணிகள், உணவுகள் மற்றும் பாட்டில்கள் கிடந்துள்ளன.

சமையலறையில் கெட்டு போன உணவு, கழிவறையில் பூனைகளின் கழிவுகள் என மலைபோல் குவிந்து கிடந்தன. வீட்டில் வசித்தவர் எந்த இடத்தில் படுத்து உறங்கினார் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு வீடு குப்பைகளால் நிறைந்து கிடந்தது. வீட்டின் சமையலறை, கழிவறை என எல்லா இடங்களிலும் குப்பைகள் காணப்பட்டன. வீட்டில் வசித்தவர், முன்பணம் 400 பவுண்டுகளை வைத்து கொள்ளுங்கள் என கூறி சென்றாலும், அந்த அறைகளை சரி செய்ய ஆயிரம் பவுண்டுகளுக்கும் கூடுதலாக தேவைப்படும்.

இந்த வாடகை ஒப்பந்தத்திற்காக, ஜான் பிரான்சிஸ் என்ற ஏஜென்ட் நிறுவனத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு லாக்கிங் சென்றுள்ளார். ஆனால், திரும்பி வந்து பார்த்தபோது மோசம் போய்விட்டோம் என லாக்கிங் உணர்ந்துள்ளார். 5 ஆண்டுகளாக 12% பணம் மற்றும் வாட் வரியையும் என்னிடம் இருந்து எடுத்து கொண்டனர். பின்னர் கடைசியில் அந்த நிறுவனம் இப்படி கைவிட்டு சென்றுள்ளது என லாக்கிங் வருத்தத்துடன் கூறுகிறார்.

இதுபற்றி ஜான் பிரான்சிஸ் நிறுவனம் தரப்பில் கூறும்போது, ஜான் பிரான்சிஸ் லெட்டிங்ஸ் எந்தவொரு வாடிக்கையாளரின் புகாரையும் தீவிர கவனத்தில் எடுத்து கொள்ளும். இந்த சம்பவம் பற்றி அதிகாரப்பூர்வ புகாரை பெற்று, தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசயத்தில், வீட்டு உரிமையாளருடன் இணைந்து நல்ல தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 1515

0

0