ஹாங்காங் ஊடக அதிபர் கைது..! ஜனநாயகவாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் சீனா..!

10 August 2020, 10:48 am
Jimmy_Lai_UpdateNews360
Quick Share

கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் ஹாங்காங் நகரத்தின் மீது விதிக்கப்பட்ட புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஹாங்காங் காவல்துறையினர், ஊடக அதிபர் ஜிம்மி லாயை இன்று கைது செய்தனர் மற்றும் நிறுவனத்தின் தலைமையகத்தையும் சோதனை செய்துள்ளனர்.

“இந்த நேரத்தில் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்ததற்காக ஜிம்மி லாய் கைது செய்யப்படுகிறார்” என்று மார்க் சைமன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பாதுகாப்புச் சட்டத்தை மீறிய சந்தேகத்தின் பேரில் 39 முதல் 72 வயது வரையிலான ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அந்த அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

71 வயதான லாய், பிரபலமான செய்தி ஊடகத்தை வைத்திருக்கிறார். மேலும் ஹாங்காங்கில் வெளிப்படையாக பேசப்படும் ஜனநாயக சார்பு நபராக இருக்கிறார். அவர் சீனாவின் சர்வாதிகார ஆட்சியை விமர்சிக்க சிறிதும் தயங்கியதில்லை. இதுவே அவரின் கைதுக்கு காரணம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா இயற்றிய புதிய பாதுகாப்புச் சட்டம் ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வந்தது. கடந்த ஆண்டு ஹாங்காங்கை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலுக்கிய பின்னர் கருத்து வேறுபாட்டைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக,  சட்டத்தை ஜனநாயகவாதிகள் பார்க்கின்றனர்.

லாய் மற்றும் அவரது மகனின் வீட்டில் காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும், லாய் நிறுவிய நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற ஊடகக் குழுவின் பல உறுப்பினர்களை காவலில் வைத்ததாகவும் சைமன் கூறினார்.

1995 ஆம் ஆண்டில் லாய் நிறுவிய ஆப்பிள் டெய்லி டேப்ளாய்டை நெக்ஸ்ட் டிஜிட்டல் இயக்குகிறது. இது பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைப்பதற்கு முன்னதாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லாயைப் போலவே, ஆப்பிள் டெய்லியும் ஒரு வலுவான ஜனநாயக சார்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. மேலும் அதன் வாசகர்களை ஜனநாயக சார்பு போராட்டங்களில் பங்கேற்குமாறு அடிக்கடி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புச் சட்டம் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத செயல்களையும், நகரின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளுடன் இணங்குவதையும் தடைசெய்கிறது. இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0