கடுப்பேற்றிய பாகிஸ்தான்..! எஸ்சிஓ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறியது இந்தியா..!

15 September 2020, 7:51 pm
India_Pakistan_flags_Updatenews360
Quick Share

இந்தியாவின் உண்மைக்கு புறம்பான வரைபடத்தை பாகிஸ்தான் வெளியிட்டதை அடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மெய்நிகர் கூட்டத்திலிருந்து இந்தியா அதிரடியாக வெளியேறியது. 

எனினும், கூட்டத்தை நடத்தும் ரஷ்யாவுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்திய தரப்பு என்எஸ்ஏ சந்திப்பிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது .

ரஷ்யாவின் ஆலோசனையின் பேரில் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் இது ரஷ்யாவை அப்பட்டமாக புறக்கணிப்பதாகும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

“எஸ்சிஓ அமைப்பின் தற்போதைய தலைவரான ரஷ்யாவால் நடத்தப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வேண்டுமென்றே பாகிஸ்தான் சமீபத்தில் பிரச்சாரம் செய்து வரும் ஒரு கற்பனையான வரைபடத்தை முன்வைத்தது.” என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

“இது கூட்டத்தை நடத்தும் நாட்டின் ஆலோசனையை அப்பட்டமாக புறக்கணிப்பது மட்டுமல்லாமல் கூட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும். இந்நிலையில் ரஷ்யாவுடன் கலந்தாலோசித்த பின்னர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த சந்திப்பைப் பற்றி தவறான பார்வையை பாகிஸ்தான் முன்வைத்தது.” என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

பாகிஸ்தானின் செயலை ஆத்திரமூட்டும் செயல் என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ள நிலையில், தாங்கள் அதை ஆதரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தான் செய்ததை ரஷ்யா ஆதரிக்கவில்லை என்று ரஷ்ய கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 0

0

0