இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன்தான் உலகின் மிகச் சிறந்த சொத்து..! ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டு..!

29 January 2021, 11:57 am
un_general_secretary_updatenews360
Quick Share

உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறனை இன்று உலகம் கொண்டுள்ள மிகச்சிறந்த சொத்து என்று பாராட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர், “இந்தியாவில் தடுப்பூசிகளின் உற்பத்தி மிக உயர்ந்த அளவில் உள்ளது என்பதை நான் அறிவேன். அதற்காக நாங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். இந்தியா உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரம் சாத்தியம் என்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியது அவசியம்.” எனக் கூறினார்.

“இந்தியாவின் உற்பத்தித் திறன் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்து என்று நான் நினைக்கிறேன். அது முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உலகம் புரிந்துகொள்வதாக நான் நம்புகிறேன்.” என்று அவர் மேலும் கூறினார்.

55 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு இந்தியா பரிசளித்துள்ள நிலையில், ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வாராந்திர மாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா நேற்று, ஓமான், கேரிகாம் நாடுகள், நிகரகுவா, பசிபிக் தீவு நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளை பரிசளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்றார்.

தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியான கவி அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்காவிற்கு 1 கோடி டோஸ் தடுப்பூசியையும், ஐக்கிய நாடுகளின் சுகாதார ஊழியர்களுக்கு 10 லட்சத்தையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீவாஸ்தவா மேலும் தெரிவித்தார்.

Views: - 32

0

0