கனமழையால் பயங்கர நிலச்சரிவு; 20 பேர் மாயம்; 35,500 பேர் வெளியேற்றம்

3 July 2021, 10:34 pm
Quick Share

ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் நாட்டில் தற்போது மழைக்காலம் நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றை தவிர்ப்பதற்காக உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் அதிகாரிகள் மூலம் ஆபத்தான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டின் மத்திய மாகாணமான ஷிஜூவோகா-வில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இங்குள்ள அடாமி நகரில் கடந்த 48 நேரத்தில் 313 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

இது ஜூலை மாதம் பெய்யக்கூடிய சராசரி மழைப்பொழிவை (242.5 மி.மீ) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இதையொட்டி டோக்கியோவில் இருந்து ஒசாகாவிற்கு இயக்கப்படும் ஷின்காங்சென் புல்லட் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பிற பகுதிகளிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடாமி நகரில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.இந்த பேரிடரில் சிக்கி 20 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. அடாமி நகரானது டோக்கியோவில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் கோடைக்கால வெப்பத்தை தணிக்க உதவும் ஹாட் ஸ்ப்ரிங் ரிசார்ட்டிற்கு புகழ்பெற்றது.

நிலச்சரிவு குறித்து தகவல் தெரிவித்துள்ள பேரிடர் மேலாண்மை குழுவின் பொறுப்பாளர்,இதில் ஏராளமான வீடுகள் இடிந்து மண்ணுக்குள் மூழ்கிவிட்டன. 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக ராணுவத்தின் உதவியை நாடியிருப்பதாக தெரிவித்தார். மேலும், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், உயர் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் 35,500க்கும் ஏற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 155

0

0