ரெண்டு நிமிஷம் சீக்கிரம் போனது குத்தமா..! அதுக்கு சம்பளத்த பிடிப்பீங்களா..! அரசு ஊழியர்களுக்கு நடந்த சோகக்கதை தெரியுமா..?

Author: Sekar
16 March 2021, 9:47 pm
Employee_UpdateNews360
Quick Share

தினசரி வேலை நேரமான 8 அல்லது 9 மணிநேரத்தை முடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றமாக இங்கு கருதப்படுவதில்லை. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் சரியான நேரத்தில் செய்து முடித்து விட்டால் ஒரு சில நிமிடங்கள் சீக்கிரமாக செல்வது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்று தான்.

தனியார் நிறுவனங்கள் இப்படியிருக்க, இந்தியாவில் அரசு அலுவலகங்களில் பல நேரம், ஊழியர் தங்கள் இருக்கையில் இல்லாமல் காற்று வாங்கும் சம்பவமெல்லாம் சாதாரணமான ஒன்று. இப்படியே பார்த்து பழகிவிட்ட நமக்கு இந்த செய்தி நிச்சயம் அதிர்ச்சியளிக்கும் விஷயம் தான். 

சமீபத்தில், ஜப்பானில் அரசு அலுவலகத்தில் வேலை நேரம் முடிய 2 நிமிடங்கள் இருக்கும்போதே அலுவலகத்திலிருந்து வெளியேறியதற்கு வழங்கப்பட்ட தண்டனையைக் கேட்டால் நமக்கு நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்.

ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள புனபாஷி நகர கல்வி வாரியத்தைச் சேர்ந்த பல ஊழியர்கள் இரண்டு நிமிடங்கள் முன்னதாக வேலையை முடித்து வெளியேறியதற்காக ஊதியக் குறைப்புடன் தண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 2019 மற்றும் ஜனவரி 2021’க்கு இடையில் 316 முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பதால் நிர்வாகம் இதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் ஊதியக் குறைப்பாடு தண்டனையும் வழங்கியுள்ளது.

முன்கூட்டியே கிளம்பிய 316 நிகழ்வுகளில், பல ஊழியர்கள் தங்கள் அட்டையில் ஒரு தவறான நேரத்தை எழுதிவிட்டு சீக்கிரம் கிளம்பியதை நிர்வாகம் கண்டுபிடித்தது.

வாழ்நாள் கற்றல் துறையின் உதவி பிரிவுத் தலைவரான 59 வயதான ஒரு ஊழியர் மற்ற ஊழியர்களுக்கு ஆரம்பத்தில் வேலையை விட்டு வெளியேற உதவுவதில் முன்னிலை வகிக்கிறார் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது. சீக்கிரம் கிளம்ப உதவியதற்காக அவருக்கு அவருக்கு மூன்று மாதங்களுக்கு பத்தில் ஒரு பங்கு சம்பளம் குறைத்து வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 60 வயதில் இருப்பதாகக் கூறப்படும் மற்ற இரண்டு ஊழியர்களுக்கும் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. மேலும் நான்கு பேருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் தங்கள் ஊழியர்கள் மீது நியாயமற்ற முறையில் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று ஏராளமான பயனர்கள் எழுதுவதால் இந்த செய்தி விரைவில் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

ஆனால் ஜப்பானில் ஒரு தொழிலாளி வேலை நேரத்தில் இது போல் நடந்துகொள்வதற்கு தண்டிக்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவல்ல.

2018’ஆம் ஆண்டில், கோபி நகரில் உள்ள வாட்டர் ஒர்க்ஸ் பணியகத்தின் 64 வயதான ஊழியர் மூன்று நிமிடங்கள் முன்னதாக தனது மதிய உணவைத் தொடங்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு கண்டிக்கப்பட்டார்.

நம்ம ஊரிலும் இப்படி தண்டனை கொடுத்தா எப்படி இருக்கும்?

Views: - 65

0

0