இரட்டைக் கோபுர தாக்குதலின் 20 வது நினைவு தினத்திற்கு முன் ஆப்கனில் இருந்து வீரர்களை முழுமையாக வெளியேற்ற அமெரிக்கா திட்டம்..!

14 April 2021, 9:44 pm
Joe_Biden_UpdateNews360
Quick Share

9/11 தாக்குதல் எனும் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் 20’வது ஆண்டு நினைவு தினம் வரும் செப்டம்பர் 11’ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், அதற்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை முழுமையாக திரும்பப் பெற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் விரும்புகிறார் என்று அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ஆண்டுகளாக அமெரிக்கா தொடர்ச்சியான இராணுவ இருப்பைக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் வீரர்களை தொடர்ந்து நிறுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கான விஷயத்தில் உள்நாட்டில் பிடென் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் ஒரு உரையில் அவர் தனது முடிவை முறையாக அறிவிப்பார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி நேற்று தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு தலிபானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். மே 1’க்குள் அனைத்து அமெரிக்க மற்றும் சர்வதேச ராணுவத்தையும் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெற ஒப்புக் கொண்டார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டதில் இருந்து, அந்நாட்டில் வெளிநாட்டுப் படைகள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. இருப்பினும், சர்வதேச ஆதரவுடைய ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிராக தலிபான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

பிடென் சமீபத்தில் தனது நிர்வாகம் விரைவாக நெருங்கி வரும் மே காலக்கெடுவிற்குள் வீரர்களை திரும்பப் பெற வாய்ப்பில்லை என்று அவர் கூறினார். அதே நேரத்தில் அமெரிக்க வீரர்களை பிடென் நிர்வாகம் ஆப்கனை விட்டு வெளியேற்ற விரும்புவதாகவும் தெளிவுபடுத்தினார்.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தலிபான் ஆட்சியை அகற்றியது. அமெரிக்கா நடத்திய மிக நீண்ட போர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 20

0

0