ஹாட்ரிக் அடித்த ஜஸ்டின் ட்ரூடோ…! மீண்டும் வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!!

Author: Udhayakumar Raman
21 September 2021, 8:41 pm
Quick Share

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக கனடா பிரதமராகி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கனடாவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெருமான்மை கிடைக்காமல் போனது. அந்த நேரத்தில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மற்ற சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. லிபரல் கட்சியின் சார்பில் கனடா பிரதமராக 2015-ல் போட்டியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ 2019-ல் இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமரானார். கனடாவில் நாடாளுமன்ற பதவிக்காலம் 4 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. எனினும், 2019-ல் தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைக்காததால் மீண்டும் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்று ஆட்சியமைக்க ஜஸ்டின் ட்ரூடோ விரும்பினார்.

அதன் காரணமாக, கனடாவில் இடைத்தேர்தலை அறிவித்து தனது லிபரல் கட்சியைத் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தினார். 2015 -ம் ஆண்டு தொடங்கி 6 வருடகாலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்கொள்ளும் 3-வது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் கனடாவில் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே பரபரப்பும் தொற்றிக்கொண்டது. லிபரல் கட்சியின் தலைவராக ஜஸ்டின் ட்ரூடோ குயிபெக் மாகாணத்தின் பாப்பிநாவ் தொகுதியில் போட்டியிட்டார். முன்னதாகவே அறிவிக்கப்பட்டது போல நேற்றைய தினம் கனடாவில் மொத்தமுள்ள 338 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்த கையுடன் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின்போது, ஆளும் லிபரல் கட்சி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது. பல தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் அக்கட்சி, பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்தது.

அக்கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவும் தான் போட்டியிட்ட பாப்பிநவ் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால், மொத்தமுள்ள 338 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை லிபரல் கட்சி தக்க வைத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்பதால் கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலை போல சிறு கட்சிகளின் ஆதரவோடு ட்ரூடோ மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.தேர்தல் வெற்றியை தொடர்ந்து மக்களுக்கு உரையாற்றிய ட்ரூடோ, நாட்டுக்கு சேவையாற்ற மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கி இருப்பதாகக் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

Views: - 341

0

0