காணாமல் போன நாய்க்கு ரூ.3.6 கோடி பரிசு! லேடி காகாவின் நாய் கிடைத்ததா?

28 February 2021, 1:49 pm
Quick Share

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான லேடி காகாவின் பிரெஞ்ச் புல்டாக் நாய்கள் இரண்டும் காணாமல் போக, அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3.6 கோடி பரிசு தரப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் அந்த நாய்கள் இரண்டும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றன. பரிசு தொகையை யார் பெற்றார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மடோனா, ஜெனிபர் லோபஸ் ஆகியோரை அடுத்து உலக அளவில் பிரபலம் அடைந்த பாப் பாடகி லேடி காகா (வயது 34). இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஆசை ஆசையாக இரண்டு பிரெஞ்ச் புல்டாக் இன நாய்களை வளர்த்து வந்தார். கோஜி, கஸ்டவ் என்பது அதன் பெயர்கள். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, லேடி காகாவின் வேலைக்காரர், நாய்கள் இரண்டையும், வாக்கிங் அழைத்து சென்றிருக்கிறார்.

காரில் வந்த மர்மநபர் ஒருவர், வேலைக்காரரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு 2 நாய்களையும் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் காயமடைந்த வேலைக்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து படப்படிப்பில் இருந்து லேடி காகா டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘கோஜி, கஸ்டவ் ஆகிய எனது இரண்டு செல்ல நாய் குட்டிகளும் அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் காணாமல் போயின. இவற்றை கண்டுபிடித்து தருபவருக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார், 3.68 கோடி ரூபாய்) பரிசு தொகை அளிக்க நான் தயாராக உள்ளேன்’ என பதிவிட்டிருந்தார். நாய்க்கு இவ்வளவு தொகையா என வியந்த நெட்டிசன்கள் அவரது டுவிட்டை வைரலாக்கினார்.

இந்நிலையில், காணாமல் போன நாய்களை மீட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார், லேடி காகாவின் வீட்டில் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர். ஆனால் யார் மீட்டது, யாருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. யார் அந்த அதிர்ஷ்டசாலியோ?

Views: - 15

0

0