ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்த மாகாண அரசு: சிட்னி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மீண்டும் ஊரடங்கு
Author: kavin kumar21 August 2021, 10:03 pm
டெல்டா வைரஸ் பாதிப்பு மோசமடைவதை ஒட்டி, அடுத்த ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக கருதப்படுவது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி. இந்த மாகாணத்தில் கொரோனா முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அதே மாதத்தின் இறுதியில் தினசரி நோய்த்தொற்று 200க்கும் மேல் அதிகரித்து உச்சம் தொட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கின.இதையடுத்து இரண்டு அல்லது ஓரிலக்க எண்ணிக்கையில் தான் பாதிப்புகள் பதிவாகி வந்தன. இந்த சூழலில் கொரோனா இரண்டாவது அலை கடந்த ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.
தினசரி மூன்று இலக்க எண்ணிக்கையில் புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக சிட்னி நகரில் வரும் 29ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்டா வைரஸின் பரவல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.7 நாட்கள் பாதிப்பின் சராசரி 583ஆக காணப்படுகிறது. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்துவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கருதிய அரசு, பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் சிட்னி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. அதுமட்டுமின்று பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் முழுவதும் வீட்டுக்கு வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை ஒட்டி, நியூசிலாந்து நாட்டில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0
0