ஜப்பானில் குழந்தைகளை விட நாய்,பூனை தான் அதிகமாம்… இவைகளுக்காக அந்நாட்டு மக்கள் எவ்வளவு செலவு செய்கிறாரகள் தெரியுமா?

Author: Poorni
5 January 2021, 9:07 am
Quick Share

ஜப்பான் நாட்டில் உள்ளவர்கள் செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்றால் அதை அவர்கள் முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்யப்பட்ட செல்லப்பிராணிகளை மட்டுமே வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஜப்பான் நாட்டின் குழந்தை பிறப்பை விடச் செல்லப்பிராணிகள் வளர்ப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலக பொருளாதாரத்தைக் கவனிக்கும் கோல்ட் மேன் சேக்ஸ் என்ற நிறுவனம் ஜப்பானில் தற்போது நிலவி வரும் புதிய டிரெண்டை கண்டுப்பிடித்துள்ளது. இந்நிறுவனம் எதிர்காலத்தின் எந்த நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும் எனக் கணித்துச் சொல்லும். தற்போது ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் குறைந்து வருவதாகக் கருதிய அந்நிறுவனம் இது குறித்து ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ஜப்பான் நாட்டின் குழந்தை பிறப்பின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஜப்பானில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது அதிகரித்துள்ளது. இந்த ஆய்வில் ஜப்பானியர்கள் குழந்தைகளை விட செல்ப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு ஜப்பானில் மொத்தம் 15 வயதிற்குக் குறைவானவர்களின் எண்ணிக்கை 1.65 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 2.13 கோடியாக இருந்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அதிகமாக வேலை தருகிறார்கள். இதனால் ஊழியர்கள் லீவு எடுக்காமல் பணியாற்றுகிறார்கள். இதனால் குழந்தை பிறப்பைத் தம்பதிகள் தள்ளிப்போட்டு விடுகின்றனர். அதே நேரத்தில் தங்கள் வீட்டில் பொழுதைக் கழிக்கச் செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஜப்பான் அரசு, அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 14 நாட்கள் விடுமுறையைக் கட்டாயப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதே நேரத்தில் ஜப்பானில் ஆண், பெண் ஆகிய இருவரும் பணிக்குச் செல்லும் கலாச்சாரம் இருந்து வருகிறது. இதனால் இருவருமே குழந்தை பிறந்தால் அதைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்க விரும்பாததால், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற முடிவை எடுத்து வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பிஸ்னஸ் இன்சைடர் நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஜப்பானில் இதே நிலை தொடர்ந்தால் ஜப்பானில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 35 சதவீதத்திற்கும் மேல் 80 வயதானவர்கள் தான் இருப்பார்கள் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2025ம் ஆண்டு மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு 65 வயதிற்கும் அதிகமாகத் தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜப்பான் அரசு மக்கள்தொகை அதிகரிப்பைப் பற்றி கவனம் கொள்ளாமல் இருந்தால் அடுத்த 50 ஆண்டுகளில் அந்நாட்டின் மக்கள் தொகை 8 கோடியாகவும், அடுத்த 100 ஆண்டுகளில் 4 கோடியாகவும் சுருங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜப்பானியர்கள் செல்லப்பிராணிகளைக் கவனித்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மற்ற நாடுகளைக் காட்டிலும் செல்லப்பிராணி பராமரிப்பில் ஜப்பான் தனித்து இருக்கிறது. சரியாக நேரத்திற்கு உணவு, மருந்து, சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதற்கு ஆடைகள், வாங்குவது விலை அதிகமான பொருட்களை வாங்குவது என ஜப்பானியர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்காகச் செலவு செய்கின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குழந்தைகள் ஆடைகளை விட நாய்களின் ஆடைகளை வாங்குவது எளிது, குழந்தைகளை ஆடைகள் பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படுவதில்லையாம். இதனால் ஜப்பானில் செல்லப்பிராணிகளை வைத்து நடக்கும் வணிகம் ஆண்டிற்கு 8.2 பில்லியன் பவுண்ட்ஸ் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா ஜப்பானில் நாய்களுக்கு யோகா வகுப்புகள் எல்லாம் நடத்தப்படுகிறதாம். இது மட்டுமல்ல இந்த செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அவைகளுக்கு இறுதிச்சடங்கு நடத்தவும் அந்நாட்டு மக்கள் அதிகமாகச் செலவு செய்கிறார்களாம். இதைக் கேட்டவே விநோதமாக இருக்கிறது அல்லவா?

Views: - 56

0

0