தங்கமுலாம் பூசப்பட்ட மகாத்மா காந்தியின் கண்ணாடி ஏலம்..! விலையைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்..!

10 August 2020, 3:39 pm
mahatma_gandhi_updatenews360
Quick Share

தென் மேற்கு இங்கிலாந்தின் மிகப்பெரிய ஏல இல்லமான கிழக்கு பிரிஸ்டல் ஏலத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் கிடைத்த ஒரு ஜோடி மகாத்மா காந்தியின் கண்ணாடிகள் விற்பனைக்கு வர உள்ளது. 

இது தொடர்பாக பேசிய ஏலதாரர் ஆண்ட்ரூ ஸ்டோவ், “கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாரோ ஒருவர் எங்கள் லெட்டர் பாக்ஸில் இதை போட்டுள்ளார்கள். எனது ஊழியர்களில் ஒருவர் அவற்றை என்னிடம் ஒப்படைத்தார். அவை காந்தியின் கண்ணாடிகள் என்று அதனுடன் ஒரு குறிப்பும் இருந்தது. இது மிக சுவாரஸ்யமானது என்று நான் நினைத்தேன்.” எனக் கூறினார்.

விசாரணையில், ஸ்டோவ், வட்டமான விளிம்பு கொண்ட தங்கமுலாம் பூசப்பட்ட கண்ணாடிகள், இந்திய விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய தலைவருடையது எனக் கண்டறிந்து தான் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டதாகக் கூறினார்.

“இதையடுத்து கண்ணாடிகளை லெட்டர்பாக்சில் போட்ட நபருக்கு மீண்டும் போன் செய்து விசயத்தைக் கூறினேன். இதைக் கேட்ட அவருக்கு கிட்டத்தட்ட மாரடைப்பு ஏற்பட்டது என்று நான் நினைக்கிறேன்.” என்று ஸ்டோவ் கூறினார்.

கண்ணாடிகள், 19,600 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனத்தின் வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும் என அவர் மேலும் கூறினார்.

“1920’களில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றபோது உறவினர் ஒருவர் காந்தியை சந்தித்த பின்னர், உரிமையாளரின் குடும்பத்தில் கண்ணாடிகள் தலைமுறை தலைமுறையாக கைமாறி வருவதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.” என ஸ்டோவ் கூறினார்.

“நாங்கள் தேதிகளைப் பார்த்தோம். அது அனைத்தும் பொருந்துகிறது. காந்தி கண்ணாடி அணியத் தொடங்கிய தேதி கூட பொருந்துகிறது. அவர் அணிந்திருந்த முதல் ஜோடி கண்ணாடிகளில் இதுவும் ஒன்றாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

கண்ணாடிகள் மீது, குறிப்பாக இந்தியாவிலிருந்து நிறைய ஆர்வம் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் அவரை அப்படியே அடைந்தது அதிர்ஷ்டம் என்றும் ஸ்டோவ் கூறினார்.

“அவை வெற்று வெள்ளை உறை ஒன்றில் இருந்தன. அவை மிக எளிதாக திருடப்பட்டிருக்கலாம் அல்லது வெளியே விழுந்திருக்கலாம். இது ஒரு நிறுவனமாக நாம் இதுவரை கண்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.” எனத் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 21 அன்று ஆன்லைனில் மட்டும் ஏலத்தின் ஒரு பகுதியாக கண்ணாடிகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

Views: - 2

0

0