இந்திய பகுதிகளை இணைத்து வரைபடம் வெளியீடு..! இம்ரானை கேலி செய்து வீடியோ போட்ட நபர்..! கைது செய்த காவல்துறை..!

13 August 2020, 6:13 pm
Man_Pak_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கேலி செய்த நபர் ஒருவர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டார். காஷ்மீரை அதன் புதிய அரசியல் வரைபடத்தில் சேர்க்கும் இம்ரான் கான் அரசின் அரசின் முடிவை விமர்சித்தற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் சமீபத்தில் வெளியிட்ட அரசியல் வரைபடத்தில், காஷ்மீர் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை பாகிஸ்தான் தனது பிரதேசத்தின் பகுதிகளாகக் கூறியது. இந்த நடவடிக்கை ஆர்டிகிள் 370’வது பிரிவை ரத்து செய்து ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் முடிவின் ஒரு ஆண்டு நிறைவின் போது வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“புதிய வரைபடத்தை அமைச்சரவை, எதிர்க்கட்சி மற்றும் காஷ்மீர் தலைமை ஒப்புதல் அளித்ததால் இன்று பாகிஸ்தானுக்கு ஒரு வரலாற்று நாள். காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும், இந்த வரைபடம் அதை நோக்கிய முதல் படியாகும்.” என்று கான் முன்னதாக அந்த நாட்டிற்கு உரையாற்றினார்.

இந்நிலையில் இந்த நடவடிக்கையை அபத்தமானது என்று நிராகரித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், “இது அரசியல் அபத்தத்திற்கான ஒரு பயிற்சியாகும். இது இந்திய குஜராத் மாநிலத்திற்கும், நமது யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றுக்களை முன்வைக்கிறது.” என தனது அறிக்கையில் தெரிவித்தது.

ஆகஸ்ட் 5, 2019 முதல், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தபோது, ​​இந்த விஷயத்தை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் பல முயற்சிகளை மேற்கொண்டது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உட்பட பல தளங்களில், காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கூற்றுகளுக்கு சர்வதேச ஆதரவைப் பெற முயற்சித்தார். எனினும், அவர் உலக அமைப்புகளிடமிருந்தும், சீனா உள்ளிட்ட பாகிஸ்தானின் நட்பு நாடுகளிடமிருந்தும் எந்தவொரு வலுவான பதிலையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இம்ரான் கான் தனது தோல்வியை மறைக்க தற்போது, இந்திய பகுதிகளை வரைபடத்தில் இணைத்துள்ளதை நையாண்டி செய்து அந்த குறிப்பிட்ட நபர் வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோ வைரலான நிலையில், இம்ரான் கான் கட்சியினர் வீடியோ வெளியிட்டவரை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இதற்கிடையே பிரதமரை விமர்சித்ததற்காக கைது செய்து சிறையிலடைப்பதா என எதிர்க்கட்சிகள் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.