போராட்டத்தை ஒடுக்க கடுமையான ராணுவச் சட்டம் அமல்..! மியான்மரில் தொடரும் ஒடுக்குமுறை..!

15 March 2021, 2:59 pm
myanmar_martial_law_updatenews360
Quick Share

மியான்மரின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு நாட்டின் மிகப் பெரிய நகரமான யங்கூனின் சில பகுதிகளில் இராணுவச் சட்டத்தை அறிவித்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில், நேற்று 38 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ள நிலையில், அமைதியை நிலைநாட்ட கடுமையான ராணுவ சட்டத்தை நகரின் சில பகுதிகளில் ராணுவ ஆட்சிக்குழு அமல்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் அதிகபட்சமாக 34 பேர் யங்கோனைச் சேர்ந்தவர்கள் ஆவர். யங்கோனின் ஹ்லேங் தார் யார் மற்றும் ஸ்வேபீதா ஆகிய பகுதிகள் தற்போது இராணுவச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று யங்கோனில் 22 பொதுமக்கள் இறந்த இடமாக ஹிலேங் தார் யார் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு மேலும் 12’க்கும் அதிகமான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 1’ஆம் தேதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ கி ஆட்சியை கவிழ்த்து, மியானமர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, தொடர்ந்து அந்நாட்டில் ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ராணுவ ஆட்சியாளர்கள் கடும் எச்சரிக்கை, துப்பாக்கிச் சூடு என மிரட்டினாலும் போராய்யக்காரர்கள் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் யங்கூனில் தற்போது நிலைமை ராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட முடியாத சூழலை நோக்கி செல்வதால், கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ராணுவ சட்டத்தை ஆட்சியாளர்கள் அமல்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் அந்த பகுதிகளின் பாதுகாப்பு நிர்வாகம் உள்ளூர் காவல்துறையிடமிருந்து பறிக்கப்பட்டு, ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். யங்கோன் பிராந்திய தளபதியின் கீழ் இப்பகுதியில் நிர்வாக, நீதித்துறை கட்டுப்பாடுகள் செல்லும்.

ராமானுவ சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், போராட்டத்தை முற்றிலும் ஒடுக்க, எந்தவிதமான நடவடிக்கைக்கும் ராணுவ ஆட்சியாளர்கள் தயாராக உள்ளனர் என்பது உறுதியாகியுள்ள நிலையில், ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

Views: - 82

0

0