“சித்தி”யைத் தேடி கூகுளை ஜாம் செய்த அமெரிக்கர்கள்..! கமலா ஹாரிஸ் உரையால் நெகிழ்ச்சி..!
20 August 2020, 7:26 pm2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியில் ஜோ பிடென் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், ஜோ பிடென் தனது துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த திங்களன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜோ பிடென் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். அப்போது கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், தனது தாயார் சியாமளா கோபாலன் குறித்து குறிப்பிடுகையில், தனது தாய் குடும்ப உறவுகள், சமுதாய பொறுப்புகள் குறித்து போதித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தன பேச்சில் குடும்ப உறவுகள் குறித்து பேசிய போது, “சித்தி” என்ற சொல்லை தமிழிலேயே குறிப்பிட்டார்.
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் தமிழில் “சித்தி” எனக் கூறியது அமெரிக்க இந்தியர்களிடையே, குறிப்பாக அமெரிக்க வாழ் தமிழர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமலா ஹாரிஸ் உச்சரித்த “சித்தி” எனும் சொல் குறித்து இந்திய ட்விட்டர்வாசிகள் உணர்ச்சிபொங்க பதிவிட்டு வரும் நிலையில், அமெரிக்கர்கள் “சித்தி” எனும் சொல்லின் பொருளை கூகுளில் தேடி வருகின்றனர்.
கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர் என்பதும், அவரது தாத்தா கோபாலன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் சுதந்திர இந்தியாவில் பல உயரிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கமலா ஹாரிஸின் சித்தி சரளா கோபாலன் தற்போது சென்னையில் வசித்து வருவதும், கமலா ஹாரிஸ் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக போட்டியிட்டபோது, சென்னை பெசன்ட் நகரிலுள்ள கோவிலில் 108 தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.