மியான்மர் தேர்தல்..! மீண்டும் வெற்றிக்க்கொடி நாட்டிய ஆங் சான் சூ கி..!

10 November 2020, 5:59 pm
Aung_San_Suu_Kyi_UpdateNews360
Quick Share

ஆங் சான் சூ கியின் ஆளும் தேசிய ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (என்.எல்.டி) கடந்த ஞாயிற்றுக் கிழமை மியான்மரில் நடந்த தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.

2011’இல் மியான்மர் ராணுவ ஆட்சியைக் கைவிட்டு ஜனநாயக பாதையில் திரும்புவதாக அறிவித்த பிறகு, நாட்டில் நடக்கும் இரண்டாவது தேசியத் தேர்தல் என்பதால், ஞாயிற்றுக்கிழமை மில்லியன் கணக்கானவர்கள் ஆவலுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்கள்.

ரோஹிங்கியா நெருக்கடியைக் கையாண்டதன் மூலமும், பல இன சிறுபான்மைப் பகுதிகளில் பரவலான ஏமாற்றத்தாலும் உலகளாவிய அவப்பெயர் இருந்தபோதிலும், நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கீ தற்போதும் மியான்மரில் பலருக்கு ஒரு கதாநாயகியாக இருக்கிறார்.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் மியோ ந்யூன்ட், நாடு முழுவதும் உள்ள கட்சி முகவர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் மூலம், என்.எல்.டி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“நாங்கள் ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டிய 322 இடங்களை மட்டுமே வெல்ல மாட்டோம். ஆனால் எங்கள் 2015’ஆம் ஆண்டின் 390 சாதனையை முறியடிக்க எதிர்பார்க்கிறோம்.” என அவர் உற்சாகத்துடன் கூறினார்.

2015’ஆம் ஆண்டில், முதன் முதலாக நடந்த தேர்தலில் என்.எல்.டி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால் அரசியலமைப்பால் இராணுவத்துடன் ஒரு அதிகாரமற்ற அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டது. தற்போது மூன்று முக்கிய அமைச்சகங்களையும், பாராளுமன்ற இடங்களின் கால் பகுதியையும் ராணுவம் கட்டுப்படுத்துகிறது.

இராணுவத்துடன் இணைந்த எதிர்க்கட்சியான யு.எஸ்.டி.பி, மியான்மரின் அடுத்த மிகப்பெரிய கட்சியாக உள்ள நிலையில், அது இன்னும் தகவல்களை சேகரித்து வருவதாகவும், தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

ஒட்டுமொத்த முடிவின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் சில நாட்கள் கழித்தே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 27

0

0

1 thought on “மியான்மர் தேர்தல்..! மீண்டும் வெற்றிக்க்கொடி நாட்டிய ஆங் சான் சூ கி..!

Comments are closed.