நெதர்லாந்து அரசு ராஜினாமா..! குழந்தைகள் நலத் திட்டத்தில் ஊழல் அம்பலமானதால் திடீர் முடிவு..!

16 January 2021, 10:37 am
Netherland_PM_Rutte_Resigns_UpdateNews360
Quick Share

குழந்தைகள் நலன் தொடர்பான திட்டத்தில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சமானதால், நெதர்லாந்து அரசாங்கம் ஆட்சியிலிருந்து விலகுவதாக பிரதமர் மார்க் ரூட் தெரிவித்தார்.

குழந்தை நலன்களைக் பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டத்தில் மோசடி செய்ததாக பல குடும்பங்கள் மீது வரி அதிகார்கள் தவறாகக் குற்றம் சாட்டிய நிலையில் இந்த மோசடி வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர், தனது முடிவை மன்னர் வில்லியம் அலெக்சாண்டருக்குத் தெரிவித்ததாகவும், பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு விரைவில் இழப்பீடு வழங்குவதற்கும், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும் தனது அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றுவதாக உறுதியளித்ததாகவும் கூறினார்.

“முழு அமைப்பும் தோல்வியுற்றால், நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் நாங்கள் ஒரே மனதுடன் இருக்கிறோம். அதனால் தான் நான் ராஜாவுக்கு முழு அமைச்சரவையின் ராஜினாமாவை வழங்கினேன்.” ரூட் கூறினார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக நெதர்லாந்து அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வந்தது. நெதர்லாந்தில் பொதுத் தேர்தல் வரும் மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே விலகுவார்களா என்று மக்கள் விவாதிக்கத் தொடங்கினர்.

எனினும் தற்போதைய ராஜினாமா முடிவு, பெரும்பாலும் அடையாள அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. மார்ச் 17’ஆம் தேதி நெதர்லாந்தில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய கூட்டணி உருவாகும் வரை ரூட்டின் அரசாங்கம் இடைக்கால அரசாக தொடர்ந்து பதவியில் நீடிக்க உள்ளது.

இருப்பினும் அவரது கட்சி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஒரு புதிய கூட்டணியை அமைப்பதில் வெற்றி பெற்றால், ரூட் மீண்டும் பிரதமராகிவிடுவார்.

இதற்கிடையே மற்றொரு ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில், ஊழல் மோசடி தொடர்பாக பிரதமர் ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் இத்தாலிய பிரதமர் கியூசெப் கான்டேவின் ஆளும் கூட்டணியில் உள்ள ஒரு சிறிய கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் கவிழும் அபாயத்தில் உள்ளது.

இதற்கிடையே மற்றொரு புறம், ஐரோப்பாவின் மிகப்பெரும் பொருளாதாரங்களில் ஒன்றான ஜெர்மனியின் தலைமைப் பொறுப்பில் 16 ஆண்டுகளாக இருந்து வரும் ஏஞ்செலா மெர்க்கெல் பதவியிலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றன் பின் ஒன்றாக பல ஐரோப்பிய நாடுகளின் தலைமையில் ஒரே  எழுந்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.