நடுவானில் வெடித்துச் சிதறிய ஏவுகணை: அப்செட்டில் வடகொரியா…முக்கிய தகவலை வெளியிட்ட தென்கொரிய ராணுவம்..!!

Author: Rajesh
16 March 2022, 1:39 pm
Quick Share

சியோல்: வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று நடுவானில் வெடித்து சிதறியதாக தென்கொரிய ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவருகிறது வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.

Image

மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் வட கொரியா தனது ராணுவத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஏவுகணை சோதனையை தொடர்கிறது. ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்றவற்றை சோதித்து வருகிறது.

தனது ராணுவ தளவாடங்களை நவீனமயமாக்கும் முயற்சியாக சமீப காலமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 10 முறை ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று நடுவானில் வெடித்து சிதறியதாக தென்கொரிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய ஏவுகணை சுமார் 20 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது வெடித்து சிதறியதாக தென்கொரியா ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. வெடித்துச்சிதறிய ஏவுகணை பற்றிய தரவுகள் எதுவும் தெரியவில்லை. தற்போது அந்நாட்டின் ஏவுகணை பரிசோதனை தோல்வி அடைந்து இருப்பதாக வெளியாகும் செய்தி வடகொரியாவின் திட்டத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுவதாக சர்வதேச நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Views: - 1625

0

0