விலங்குகளைப் போல் நடத்தப்படும் மக்கள்..! கொந்தளித்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர்..!
25 September 2020, 3:22 pmபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆர்வலர் சஜ்ஜாத் ராஜா அவர்களின் அரசியல், சிவில் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிராந்தியத்தின் குடிமக்களை விலங்குகளைப் போலவே நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் அரசால் விலங்குகளைப் போல நடத்துவதைத் தடுக்குமாறு சபையை மன்றாடுகிறோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தேர்தல் சட்டம் 2020 எங்கள் அரசியலமைப்பு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. ஐநா தீர்மானங்களை அப்பட்டமாக மீறி பாகிஸ்தானுடன் இணைப்பதை எதிர்க்கும் எங்கள் நடவடிக்கைகள் அரசுக்கு எதிரானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.” என தேசிய சமத்துவக் கட்சியின் தலைவர் ஜே.கே.ஜி.பி.எல் தலைவர் பேராசிரியர் சஜ்ஜாத் ராஜா கூறியுள்ளார்.
நேற்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் படும் துன்பங்களை பேசிய அவர் சட்டவிரோதமாக காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் முடிவை கைவிட ஐநா தலையிட வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் எங்கள் சொந்த இடத்தில் துரோகிகளாக கருதப்படுகிறோம். எங்கள் அரசியல் நடவடிக்கைகளை சட்டவிரோதமாக அறிவிப்பதன் மூலம், இந்த செயல் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் மூலம் நம் மக்களை படுகொலை செய்வதற்கும் காணாமல் போனவர்களாக அறிவிப்பதற்கும் ஒரு அதிகாரத்தை அளிக்கிறது.” எனத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் எல்லையின் இருபுறமும் உள்ள இளம் மனங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் மூளைச் சலவை செய்கிறார்கள் என்று பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக பேராசிரியர் ராஜா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் இந்தியாவுடனான பினாமி போரில் அவர்களை அடிமைகளாக பயன்படுத்துகிறது என்று கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற எதிர்ப்புக் குரல்களால் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது.