பாகிஸ்தானில் வலம் வந்த சார்லி சாப்ளின்! சுற்றி சுற்றி வரும் குழந்தைகள்

2 February 2021, 11:01 am
Quick Share

கொரோனா மன அழுத்தத்தில் சிக்கியிருக்கும் மக்களை சிரிக்க வைப்பதற்காக, சார்லி சாப்லின் வேடம் அணிந்து, பார்ப்பவர்களை தனது வெகுளித்தவம் மற்றும் கோமாளித்தனத்தால், சிரிக்க வைத்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த உஸ்மான் கான். அவரை சுற்றி எப்போதும் குழந்தைகள் எறும்பு போல் மொய்த்து வருகின்றனராம்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள், அப்படி உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் நடிகர் சார்லி சாப்ளினை தான் உலகம் கை காட்டும். ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த காலத்தில் வசனம் எதுவும் பேசாமல் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் சார்லி சாப்ளின். தன் வாழ்வில் பெரும் சோகம் நிறைந்திருந்த போதும், எல்லோரையும் சிரிக்க வைத்த அவருக்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அவரது ரசிகர் கூட்டங்களில் ஒருவர் தான், பாகிஸ்தானை சேர்ந்த பொம்மை விற்கும் தொழிலாளியான உஸ்மான் கான். பெஷாவர் நகரில் வசித்து வரும் இந்த 28 வயது இளைஞர், பொம்மை விற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பின், சார்லி சாப்ளினாக மாறி விட்டார். அமைதியாக இருந்து கொண்டு, சார்லி சாப்ளின் போல், கோமாளித் தனமான நகைச்சுவையை அள்ளித் தெளிக்க, அவரை சுற்றி இப்போதும் குழந்தைகள் மொய்த்து வருகின்றனராம்.

கொரோனா ஊரடங்கின் போது, பலரை போலவும் இவரது வாழ்க்கையில் இருண்ட பக்கங்கள் சூழ்ந்திருக்கின்றன. அதனை ஈடுகட்ட, வீட்டில் இருந்தபடி, சார்லி சாப்ளின் வீடியோக்களை பார்த்து மன அழுத்தத்திலிருந்து விடுபட்டதுடன், மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார். ஒருகட்டத்தில், தானும் அவர் போல், பிறர் முகத்தில் சிரிப்பை வரவைக்க வேண்டும் என முடிவு செய்து, சார்லி சாப்ளினாகவே மாறி விட்டார்.

சாலைகளிலும், கடைகளிலும் தனது சார்லி சாப்ளின் குறும்பை அவர் வெளிப்படுத்த, மெல்ல மெல்ல பிரபலமாகி இருக்கிறார். முதலில் பெஷாவர் நகர் முழுவதும் அறியப்பட்ட அவர், சமூக வலைதளங்களின் உதவியுடன், பாகிஸ்தான் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் தற்போது பிரபலம் அடைந்திருக்கிறார். இவருடன் பலரும் செல்பி எடுத்து கொள்கின்றனர். உலகின் கடைசி மனிதனின் முகத்தில் சிரிப்பு இருக்கும் வரை சார்லி சாப்ளின் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என்பது நிதர்சனமான உண்மை தான்.

Views: - 0

0

0