மருத்துவமனையில் தரையில் அயர்ந்து தூங்கிய தந்தை; புகைப்படம் ஏன் வைரல் தெரியுமா?

18 April 2021, 1:53 pm
Quick Share

தனது மகளின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த தந்தை, தரையில் படுத்து அயர்ந்து தூங்கும் புகைப்படத்தை அவரது மனைவி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் மிசவுரி மாகாணத்தில் உள்ள பார்மிங்க்டன் நகரில் வசிக்கும் தம்பதியினர் சாரா டங்கன் மற்றும் ஜோ டங்கன். ஜோ சிமிண்ட் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். சாரா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள். இந்நிலையில், தனது இளைய மகளுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகவலை ஜோவிடம் சாரா மொபைலில் தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக ஆபிஸில் தகவல் தெரிவித்த ஜோ, வேலையை அப்படியே விட்டுவிட்டு மருத்துவமனை விரைந்திருக்கிறார். அவர் 12 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்துவிட்டு, மருத்துவமனைக்கு ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்திருக்கிறார். மருத்துவமனையில் தனது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, வேலை, பயண அசதியில், மருத்துவமனையில் தரையில் படுத்து, தனது மகளின் பையை தலைக்கு வைத்து தூங்கியிருக்கிறார். இதனை புகைப்படமாக எடுத்த சாரா, பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.

‘இந்த வாழ்க்கையை உன்னைத்தவிர வேறு யாருடனும் வாழ நான் விரும்பவில்லை. பாசமாக கணவராகவும், அன்பான அப்பாவாகவும் நடக்கும் உங்களுக்கு நன்றி’ என்ற கேப்ஷனுடன் அவர் இந்த புகைப்படத்தை பகிர, அது வைரலாக பரவியது. நெட்டிசன்கள் பலரும் அன்பான அவரது கணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 95

0

1