150 ஆண்டுகால சிறைத் தண்டனை..! அமெரிக்காவின் மிகப்பெரும் மோசடியில் ஈடுபட்ட மடோஃப் உடல்நலக் குறைவால் மரணம்..!

15 April 2021, 4:26 pm
bernie_updatenews360
Quick Share

ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றி, அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டு, 150 ஆண்டு சிறைத் தண்டனையைப் பெற்ற பெர்னார்ட் மடோஃப் எனும் அமெரிக்கர் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

அமெரிக்காவின் வட கரோலினாவின் பட்னரில் உள்ள பெடரல் மருத்துவ மையத்தில் மடோஃப் மரணத்தை அவரது வழக்கறிஞரும் சிறைச்சாலை பணியகமும் உறுதிப்படுத்தியது.

கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அவரை சிறையில் இருந்து விடுவிக்க முயன்று மடோஃப்பின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தோல்வியுற்றனர். அவர் இறுதி கட்ட சிறுநீரக நோய் மற்றும் பிற நாட்பட்ட மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தும் ஜாமீன் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அந்த வழக்கறிஞர்களில் ஒருவரான பிராண்டன் மடோஃப் உடல்நலம் சரியில்லாமல் இருப்பது தொடர்பான இயற்கை காரணங்களால் இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது என்றார்.

பல தசாப்தங்களாக, மடோஃப் ஒரு பொருளாதார வல்லுனராக அமெரிக்காவில் பார்க்கப்பட்டார். நாஸ்டாக் பங்குச் சந்தையின் முன்னாள் தலைவரான அவர், முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை ஈர்த்தார். புளோரிடாவின் ஓய்வு பெற்ற தொழிலதிபர்கள் முதல் திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், நடிகர் கெவின் பேகன் மற்றும் ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் சாண்டி கவுபாக்ஸ் போன்ற பிரபலங்கள் வரை பலரும் இவரின் ஆலோசனையைக் கேட்டு செயல்படும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரது முதலீட்டு ஆலோசனை வணிகம் 2008 ஆம் ஆண்டில் ஒரு ஏமாற்றுத் திட்டம் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. இது அவரிடம் முதலீடு செய்திருந்த மக்களின் செல்வத்தை மட்டுமல்லாது பல தொண்டு நிறுவனங்களையும் அழித்தது. அவர் வெறுக்கப்பட்டார். இதனால் அவர் நீதிமன்றத்திற்கு குண்டு துளைக்காத ஆடை அணிந்து வரும் அளவிற்கு நிலைமை மோசமானது.

இந்த மோசடி வால் ஸ்ட்ரீட்டின் வரலாற்றில் மிகப்பெரியது என்று நம்பப்பட்டது.

பல ஆண்டுகளாக, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நபர்கள் இந்த திட்டத்தை முழுமையாக கண்டுபிடிக்க உழைத்து வருகிறார்கள். மடோஃப் வணிகத்தில் 17.5 பில்லியன் டாலர் முதலீட்டாளர்களில் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை மீட்டுள்ளனர். மடோஃப் கைது செய்யப்பட்ட நேரத்தில், போலி கணக்கு அறிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வைத்திருப்பதாகக் கூறின.

பத்திர மோசடி மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு மடோஃப் மார்ச் 2009’இல் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் “மிகவும் வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன்” என்று கூறினார்.

அவரது 7 மில்லியன் டாலர் மன்ஹாட்டன் பென்ட்ஹவுஸ் குடியிருப்பில் வீட்டுக் காவலில் வாழ்ந்த பல மாதங்களுக்குப் பிறகு, அவர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அதிகபட்ச தண்டனையாக நீதிமன்றம் 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

“அவர் பணக்காரர்களிடமிருந்து திருடினார். அவர் ஏழைகளிடமிருந்து திருடினார். நடுத்தர மக்களிடமிருந்து இருந்து திருடினார். அவருக்கு எந்த மதிப்பும் இல்லை, ”என்று முன்னாள் முதலீட்டாளர் டாம் ஃபிட்ஸ்மாரிஸ் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார். “அவர் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் பணத்தில் இருந்து ஏமாற்றினார். அதனால் அவரும் அவரது மனைவியும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஆடம்பர வாழ்க்கையை வாழ முடியும்.” என அவர் நம்பியதாக மேலும் கூறினார்.

பிராண்டன் ஒரு அறிக்கையில், மடோஃப் தனது இறப்பு வரை தான் மேற்கொண்ட குற்றங்களுக்காக குற்ற உணர்ச்சியுடனும் வருத்தத்துடனும் வாழ்ந்தார் என்று கூறினார்.

ஒரு நீதிபதி மடோஃப் ரியல் எஸ்டேட், முதலீடுகள் மற்றும் அவரது மனைவி ரூத் தன்னுடையதாகக் கூறிய 80 மில்லியன் டாலர் சொத்துக்கள் உட்பட அவரது தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யும் உத்தரவை பிறப்பித்தார்.

இந்த ஊழலால் மடோஃப்பின் குடும்பம் சின்னாபின்னமாக அழிந்து போனது. அவரது மகன்களில் ஒருவரான மார்க், 2010 இல் தனது தந்தை கைது செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மடோப்பின் சகோதரரும் வியாபாரத்தை நடத்த உதவியவருமான பீட்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மடோஃப்பின் மற்றொரு மகன் ஆண்ட்ரூ 48 வயதில் புற்றுநோயால் இறந்தார். ரூத் இன்னும் வாழ்ந்து வருகிறார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஊழலில் ஒன்றை மேற்கொண்ட மடோஃப் 1938’இல் குயின்ஸில் ஒரு கீழ்-நடுத்தர வர்க்க யூத குடும்பத்தில் பிறந்து, வெறும் ஆயிரம் டாலர்களுடன் வால் ஸ்ட்ரீட்டில் தனது தொழிலைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 29

0

0