குப்பை மேட்டிலிருந்து கோபுரம்! ஒரே நாளில் கோடீஸ்வரனான ஏழை மீனவர்

6 February 2021, 10:56 am
Quick Share

கடற்கரையில் இருந்த நத்தை ஓட்டை எடுத்த மீனவருக்கு அதிர்ஷ்டம் வானத்தை பிளந்து கொட்டியிருக்கிறது. ஆம்.. நத்தை ஓட்டுக்குள் அரிதிலும் அரிதான மோலோ வகை ஆரஞ்சு முத்து இருந்துள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 10 கோடி ரூபாய்! தாய்லாந்தில் நடந்த இந்த சம்பவம் நெட்டிசன்களின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் நகோன் ஷி தம்மராட் மாகாணத்தை சேர்ந்தவர் ஹட்சாய் நியோம்டெச்சா. 37 வயது ஏழை மீனவரான இவர், கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி, குடும்பத்தினருடன் கடற்கரையில் கடல் சங்குகளை சேகரித்துள்ளார். அப்போது, கைவிடப்பட்ட மிதவை ஒன்று கடற்கரையோரம் நிற்பதை கண்டு அதில் ஏதேனும் இருக்கிறதா என தேடி இருக்கிறார்.

உள்ளே மூன்று நத்தை ஓடுகள் மட்டுமே இருந்துள்ளன. அதனை எடுத்து வீட்டிற்கு சென்று தன் அப்பாவிடம் கொடுத்திருக்கிறார். ஓடுகளை சுத்தம் செய்த அவரது அப்பா, ஆச்சரியத்தில் வாய் பிளந்திருக்கிறார். உள்ளே ஆரஞ்சு முத்து ஒன்று இருந்துள்ளது. அரிய வகை முத்தான இது மேலோ என அழைக்கப்படுகிறது. இதன் சர்வதேச மதிப்பு கோடிகளில் இருக்கும்.

இதுகுறித்து ஓரளவு அறிந்திருந்த ஹட்சாய், முறையான சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார். அதில் 7 கிராம் எடை கொண்ட ‘மேலோ’ முத்து தான் இது என உறுதிபடுத்தி கொண்டனர். கடல் நத்தைகளால் உருவாகும் இந்த ‘மேலோ’ முத்துவால், அவருக்கு கிடைக்க போகும் தொகை கொஞ்ச நஞ்சம் அல்ல.. 3.3 லட்சம் டாலர்! அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய்! அதிர்ஷ்ட தேவதை அவர் தலையிலேயே அமர்ந்திருக்கிறார் போல!

இதுகுறித்து ஹர்சாய் கூறுகையில், ‘சில நாட்களுக்க முன் எனக்கு கனவு ஒன்று தோன்றியது. அதில் வந்த முதியவருக்கு நீண்ட வெள்ளை மீசை இருந்தது. அவர் என்னை கடற்கரைக்கு வர சொன்னார். வந்தால் பரிசு கிடைக்கும் எனவும் கூறினார். இந்த முத்து, எனது குடும்பத்தின் நிலையை மாற்ற போகிறது. இதனை அதிக விலைக்கு விற்க விரும்புகிறேன்’ என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Views: - 15

0

0