பொதுமக்களை சந்தித்த போப் ஆண்டவர்: ஆரவாரத்தோடு கோஷங்களை எழுப்பிய பொதுமக்கள்

11 July 2021, 9:41 pm
Quick Share

அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் போப் ஆண்டவர் மருத்துவமனையின் பால்கனியில் இருந்து பொதுமக்களை சந்தித்தார்.

84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பெருங்குடலில் பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 ஆம் தேதி 10 பேரை கொண்ட மருத்துவ நிபுணர் குழு அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. பெருங்குடல் சுருக்கத்தால் அவதிப்பட்ட அவருக்கு, பெருங்குடலின் இடதுபாகம் அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை நடந்து 3 நாட்களுக்குப்பின், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் ஆண்டவர், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று போப் ஆண்டவர் மருத்துவமனை பால்கனியில் இருந்து பொதுமக்களை சந்தித்தார். அங்கிருந்தவாறு ஞாயிற்றுக்கிழமைக்கான பிரார்த்தனையை மேற்கொண்டு நற்செய்தி வழங்கினார். சுமார் 10 நிமிடங்கள் வரை பேசிய பின்னர் அவரை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அழைத்துச் சென்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைக் கண்டதால் பொதுமக்கள் ஆரவாரத்தோடு கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Views: - 171

13

1