இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஜோ பைடன்: இந்திய மருத்துவர்களுக்கு நிர்வாகத்தில் முக்கிய பதவி..!!

15 July 2021, 8:46 am
Quick Share

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் இரண்டு இந்திய வம்சாவளி மருத்துவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் நிர்வாகத்தில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டதில் துவங்கி அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார். இந்நிலையில் அதிபர் பைடன் இரண்டு இந்திய வம்சாவளி மருத்துவர்களுக்கு தன் நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை தற்போது வழங்கி உள்ளார்.

US_Joe_Biden_UpdateNews360

மேற்கு விர்ஜீனியா மாகாணத்தின் முன்னாள் சுகாதார கமிஷனரான மருத்துவர் ராகுல் குப்தாவை தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு கொள்கை அலுவலகத்தின் இயக்குனராக நியமித்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். இதேபோல் சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனத்தில் உலக சுகாதார பணியகத்தின் உதவி நிர்வாகியாக அறுவை சிகிச்சை நிபுணரும் பிரபல நுாலாசிரியருமான அதுல் கவாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்த ராகுல் குப்தா முன்னாள் இந்திய அரசு அதிகாரியின் மகன். முதலில் டெல்லியில் மருத்துவம் பயின்ற இவர் பின் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தார்.கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவ துறையில் இருக்கும் குப்தா மேற்கு விர்ஜீனியாவில் இரண்டு கவர்னர்களின் கீழ் பணியாற்றி உள்ளார். இவர் ‘ஸிகா மற்றும் எபோலா’ வைரஸ்களை எதிர்கொள்ள அமைக்கப்பட்டிருந்த குழுக்களை வழிநடத்திச் சென்றவர்.

மருத்துவர் கவாண்டே மருத்துவத்தில் மட்டுமல்லாமல் நுால்களை எழுதும் திறனையும் உடையவர். இவர் எழுதிய நான்கு நுால்கள் அதிகமாக விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் நிர்வாகத்தில் சுகாதார மற்றும் பொது சேவைகள் துறையின் மூத்த ஆலோசகராக கவாண்டே பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 169

0

0