சர்ச் சொத்தை வைத்து லண்டனில் ஆடம்பர பங்களா..! சிக்கிய வாடிகன் கார்டினல்..!

25 September 2020, 10:06 pm
Francis__Becciu_UpdateNews360
Quick Share

வாடிகனின் மிக சக்திவாய்ந்த கார்டினலில் ஒருவரான ஜியோவானி ஏஞ்சலோ பெசியு, லண்டனில் ஆடம்பர குடியிருப்புகள் வாங்குவதற்காக சர்ச் தொண்டு நிதியை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான விசாரணையின் மத்தியில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று மாலை வழக்கத்திற்கு மாறாக வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புனிதர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் துறைத் தலைவர் கார்டினல் ஜியோவானி ஏஞ்சலோ பெசியுவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக போப் பிரான்சிஸ் அறிவித்தார். 72 வயதான பெசியு கார்டினல் தொடர்புடைய உரிமைகளை விட்டுவிட்டார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெசியு வாடிகனின் மிக சக்திவாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை செயலாளராக பணியாற்றி வந்தார். மேலும் சந்தேகத்திற்குரிய ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது, இதில் வாடிகன் செயலகம் சர்ச் பணத்தை லண்டனில் முதலீடு செய்து ஒரு ஆடம்பர கட்டிடத்தை வாங்கியதைக் கண்டறிந்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில், வாடிகன் சுவிஸ் வங்கிக் கணக்குகளில் வைத்தியிருந்த 200 மில்லியன் டாலர் நிதி இறுதியில் லண்டனின் உயர்மட்ட செல்சியா மாவட்டத்தில் ஒரு ஆடம்பர சொத்து மேம்பாட்டுக்கு நிதியளித்தது எப்படி என்பது குறித்து விசாரிக்கத் தொடங்கியது. மேலும் இந்த செயல்பாட்டில் முதலீட்டை நிர்வகிக்கும் ஒரு நிறுவனத்திற்கு லாபத்தை ஈட்டியது குறித்தும் விசாரிக்கத் தொடங்கியது.

சுவிஸ் வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த 200 மில்லியன் டாலர் வாடிகன் செயலகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் அதீனா கேபிடல் என்ற லக்சம்பர்க் முதலீட்டு நிதிக்கு மாற்றப்பட்டது. 60 ஸ்லோன் அவென்யூவில் 49 சொகுசு குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு இந்த நிதி அனுப்பப்பட்டது. இந்த திட்டத்தில் வாடிகன் 2014 முதல் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபையின் போப்பாண்டவர் தலைமையில் வாடிகன் செயலகம் செயல்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் வழங்கிய மில்லியன் கணக்கான டாலர்களை தொண்டு காரியங்களுக்கு செலவிடுகிறது.

வாடிகன் வங்கி, இன்ஸ்டிடியூட் ஃபார் வொர்க்ஸ் ஆஃப் ரிலிஜியன் அல்லது ஐ.ஓ.ஆர் என அழைக்கப்படுகிறது. இது பல தசாப்தங்களாக ஏராளமான நிதி முறைகேடுகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாடிகனில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரே விசாரணையில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.