அன்றாட செலவுக்கே அடுத்தவரிடம் கையேந்தும் பரிதாபம்..! 500 கோடியில் மகளுக்கு திருமணம் செய்த பணக்காரரின் இன்றைய நிலை இது தான்..!

24 October 2020, 2:00 pm
Pramod_Mittal_UpdateNews360
Quick Share

லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டல் தனது தந்தை, மனைவி, மகன் மற்றும் மைத்துனர் உட்பட பல்வேறு நபர்களுக்கு 2.5 பில்லியன் டாலர் கடன்பட்டிருப்பதாக கூறியதை அடுத்து லண்டன் உயர் நீதிமன்றத்தால் மிகவும் திவாலான மனிதராக அறிவிக்கப்பட்டார். 

எஃகு உற்பத்தி நிறுவனமான ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அவரது சகோதரர் லட்சுமி மிட்டல், பிரிட்டனிலும், இந்தியாவிலும், உலகிலும் மிகவும் மதிப்பு மிக்க பணக்காரர்களில் ஒருவராக உள்ள நிலையில் பிரமோத் மிட்டல் திவாலான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிட்டல் சகோதரர்கள் இந்தியாவில் தங்கள் தொழிலைத் தொடங்கினர். பின்னர் பல இடங்களுக்கு பரவினர். ஆர்சலர் மிட்டல் தலைமையிடம் நெதர்லாந்தில் உள்ளது.

2013’ஆம் ஆண்டில், பிரமோத் மிட்டல், டச்சு நாட்டைச் சேர்ந்த முதலீட்டு வங்கியாளரான குல்ராஜ் பெஹ்லுடனான தனது மகள் ஷிரிஷ்டியின் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவழித்து செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டார்.

இந்நிலையில் பிரமோத் மிட்டல் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கு தனிப்பட்ட வருமானம் இல்லை. என் மனைவி என்னிடமிருந்து நிதி ரீதியாக சுதந்திரமாக உள்ளார். எங்களிடம் தனித்தனி வங்கிக் கணக்குகள் உள்ளன. அவருடைய வருமானம் குறித்து எனக்கு மிகக் குறைந்த தகவல்கள் உள்ளன.

மாதத்திற்கு சுமார் 2,000 பவுண்டுகள் முதல் 3,000 பவுண்டுகள் வரை எனது தனிப்பட்ட செலவு முக்கியமாக என் மனைவி மற்றும் குடும்பத்தினரால் ஏற்கப்படுகிறது. எனது திவால்நிலைக்கான சட்ட செலவுகள் கூட மற்றொரு மூன்றாம் தரப்பினரால் பூர்த்தி செய்யப்படுகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2006’ஆம் ஆண்டில், போஸ்னிய கோக் தயாரிப்பாளரான குளோபல் இஸ்பாட் கோக்ஸ்னா இன்டஸ்ட்ரிஜா லுகாவாக் (ஜிகில்) என்ற கடனுக்கான உத்தரவாததாரராக பிரமோத் ஒப்புக் கொண்டார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இவரது நிறுவனம் 166 மில்லியனை திருப்பிச் செலுத்தத் தவறியது. 2019’ஆம் ஆண்டில், போஸ்னியாவில் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே இந்தியாவிலும், பிரமோத் மிட்டல் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் 2,200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பண மோசடி விசாரணையை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முகேஷ் அம்பானி உலகின் முதல் 10 பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள நிலையில், அவரது தம்பி அனில் அம்பானி திவாலாகும் சூழ்நிலையில், பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வரும் வரும் நிலையில், தற்போது மிட்டல் குடும்பத்திலும் இதே போன்ற ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 20

0

0