நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவர வலியுறுத்தி பேரணி..!

12 January 2021, 9:12 pm
Quick Share

நேபாளத்தின் மறைந்த மன்னர் பிருத்வி நாராயண் ஷாவின் 299’வது பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்துவதற்காக காத்மாண்டுவில் மத்திய நிர்வாக செயலக சிங்கா தர்பார் நோக்கி அணிவகுத்துச் சென்றபோது, நூற்றுக்கணக்கான மன்னராட்சி சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

தடைசெய்யப்பட்ட பகுதி என்பதால், மாலைகளை வைப்பதற்காக சிங்கா தர்பார் முன் மறைந்த மன்னரின் சிலையை நோக்கிச் செல்லும்போது காவல்துறையினர் முடியாட்சி சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் மோதல்கள் வெடித்ததாக கூறப்படுகிறது.

மோதல்களில் சில பொதுமக்கள் காயமடைந்தனர்.

பிருத்வி நாராயண் ஷாவின் தேசியக் கொடியையும் படங்களையும் சுமந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்து தேசம் மற்றும் முடியாட்சியை மீண்டும் நிறுவ வேண்டும் என்று கோரினர்.

2006’ஆம் ஆண்டு மக்கள் இயக்கத்தின் வெற்றியின் பின்னர் 2008’ஆம் ஆண்டில் நேபாளம் ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டதோடு, அதன் 240 ஆண்டுகால முடியாட்சியை ஒழித்தது.

இதற்கிடையில், பிரதமர் கே பி சர்மா ஒலி மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்தினார் மற்றும் நவீன நேபாளத்தை ஒன்றிணைப்பதில் அவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.

“நேபாளத்தை ஒன்றிணைக்க மன்னர் பிருத்வி நாராயண் ஷா அளித்த பங்களிப்புகள் ஒப்பிடமுடியாதவை. இன்று, அவரது 299’வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிறப்பு பங்களிப்புகளை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று ஒலி ட்வீட் செய்துள்ளார்.

பிரித்வி நாராயண் ஷா 1745’இல் தேசிய ஒருங்கிணைப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியபோது கோர்காவின் மன்னராக இருந்தார். நேபாளத்தை ஒன்றிணைத்து, தற்போதைய வடிவத்திற்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர் ஆவார்.

அரசியலமைப்பு முடியாட்சியை மீண்டும் நிலைநாட்டக் கோரி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் வெளிவந்த முடியாட்சி சார்பு பேரணிகளை ஒலி அரசு மௌனமாக ஆதரிப்பதாக நேபாளத்தின் முக்கிய எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் கடந்த காலங்களில் குற்றம் சாட்டியது.

இந்த மாத தொடக்கத்தில், நேபாளத்தில் அரசியலமைப்பு முடியாட்சி மற்றும் இந்து அரசை மீட்டெடுக்கக் கோரி ராஸ்திரிய பிரஜாந்திர கட்சி (ஆர்.பி.பி) தேசிய தலைநகரில் அரசாங்க எதிர்ப்பு பேரணியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0