சிவப்பு ரிப்பன், ஹாரன் சவுண்ட்..! ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் வித்தியாசமான முறையில் வலுப்பெறும் போராட்டம்..!

3 February 2021, 8:01 pm
Myanmar_military_UpdateNews360
Quick Share

கடந்த பிப்ரவரி 1’ஆம் தேதி, மியான்மர் மக்கள் பல நாட்களாக அஞ்சிய மற்றொரு சதித்திட்டம் அரங்கேறியது. ஆம், மியான்மர் ராணுவம் கவனமாக திட்டமிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி மற்றும் பிற தலைவர்களை கைது செய்துள்ளனர்.

முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மர் 1962 முதல் 2011 வரை ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், பின்னர் படிப்படியாக ஜனநாயக மற்றும் பொதுமக்கள் தலைமையிலான அரசாங்கத்தை நோக்கி நகர்ந்தது.

ஆனால், இந்த இராணுவ புரட்சியுடன், மியான்மரின் ஜனநாயகத்திற்கு மீண்டும் சோதனை ஏற்பட்டது.

புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடக்கம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே சூகி மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 2020’இல் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் மகத்தான வெற்றி பெற்ற நிலையில், தேர்தல்களில் மோசடி நடந்ததாகக் கூறி, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

உலகளாவிய கண்டனம் இருந்தபோதிலும், இராணுவம் கையகப்படுத்துதல் அரசியலமைப்பின் கீழ் சட்டபூர்வமானது என்று கூறியது.

கலவரத்தை அல்லது நிலையற்ற சூழ்நிலையை ஊக்குவிக்கும் எதையும் உச்சரிக்கவோ அல்லது பதிவிடவோ கூடாது என்று புதிய அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும், நாட்டில் மக்கள் போராட்டத்தைக் கைவிட தயாராக இல்லை. பல ஜனநாயக சார்பு குழுக்கள் ஒரு ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

நேற்று, மியான்மரில் உள்ள யாங்கோனில் ஏராளமான மக்கள் கார் ஹாரன்களை ஒலிக்க விட்டும், பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பியும், சதித்திட்டத்திற்கு எதிராக தங்கள் போராட்டத்தை பதிவு செய்தனர்.

இது கொரோனா காலமென்பதால், மக்கள் சாலைகளில் கூடாமல் வீட்டிலிருந்தபடியே, நேற்று இரவு 8 மணிக்கு இந்த போராட்டத்தை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டுள்ள தலைவர் ஆங் சான் சூகிக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஒலி எழுப்ப வேண்டும் என்ற திட்டம் இருந்தபோதிலும், இந்த செயல் யாங்கோனின் பல்வேறு சுற்றுப்புறங்களில் கால் மணி நேரத்திற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், இன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவப்பு ரிப்பன் அணிந்து பணி செய்தனர். அவசரமில்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் அவர்கள் வரவில்லை. சில மருத்துவ குழுக்கள்தாய்லாந்தில் ஜனநாயக ஆர்வலர்கள் செய்ததைப் போல சமூக ஊடகங்களில் சிவப்பு ரிப்பன்களை அணிந்து மூன்று விரல் சல்யூட் எழுப்பி தங்கள் புகைப்படங்களை வெளியிட்டனர்.

இதற்கிடையே மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க சட்ட ஒத்துழையாமை இயக்கம் என்ற பேஸ்புக் குழு உருவாக்கப்பட்டது. அதில் ஆர்வலர்கள் தங்கள் பிரச்சாரங்களைப் பற்றி குறிப்பிடுகின்றனர். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அதாவது இன்று பிற்பகலுக்குள், இந்தப் பக்கத்தில் 1,50,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

ஒத்துழையாமை பிரச்சாரத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர் குழுக்கள் ஆதரிக்கின்றன.

இந்நிலையில் மற்றொரு திருப்பமாக, ஆங் சான் சூகி இன்று முறையாக சட்டரீதியாக குற்றம் சாட்டப்பட்டார். ஆங் சான் சூகி மீது மியான்மரின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0