ஆக்கப்பூர்வமான முறையில் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்..! மியான்மர் குறித்து ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்..!

27 February 2021, 2:02 pm
myanmar_coup_updatenews360
Quick Share

மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது அனைத்து நாடுகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் மற்றும் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்தியா ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கூறியுள்ளது. மேலும், மியான்மரின் தலைமையில் ஏற்பட்டுள்ள சிக்கலை அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் அந்நாட்டின் தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பை நடத்திய பின்னர், மியான்மரின் நிலைமை குறித்து முறைசாரா பொதுச் சபைக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி நேற்று இந்த கருத்தைத் தெரிவித்தார்.

“இந்தியா மியான்மருடன் நிலம் மற்றும் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கிறது மற்றும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் நேரடி பங்குகளை கொண்டுள்ளது. எனவே மியான்மரில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை இந்தியாவை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மியான்மரின் ராணுவ ஆட்சி குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். ஜனநாயகத்தை நோக்கிய பாதையை சிறுமைப்படுத்தக் கூடாது.” என்று அவர் கூறினார்.

திருமூர்த்தி மேலும், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக வழிமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அமைதி விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும் இந்தியா நம்புகிறது என்றார்.

“மியான்மர் தலைமையை அவர்களின் வேறுபாடுகளை அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் தீர்க்க ஒன்றிணைந்து செயல்படுமாறு நாங்கள் அழைக்கிறோம்.” என்று அவர் கூறினார்.

மிகப்பெரிய ஜனநாயகம் என்ற வகையில், மியான்மரில் ஒரு நிலையான ஜனநாயக கூட்டாட்சி ஏற்படுவதற்கு இந்தியா தனது ஆதரவில் எப்போதும் உறுதியுடன் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

“மியான்மர் மற்றும் அதன் மக்களின் நெருங்கிய நண்பராகவும், அண்டை நாடாகவும் இந்தியா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் கலந்துரையாடுவதால் மக்களின் நம்பிக்கையும் அபிலாஷைகளும் மதிக்கப்படும்.

ஜனநாயக ஒழுங்கை மீட்டெடுப்பது மியான்மரில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.” என்று அவர் கூறினார். இந்த முக்கியமான கட்டத்தில் சர்வதேச சமூகம் மியான்மர் மக்களுக்கு அதன் ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Views: - 4

0

0