‘ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி’ – ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு..!

13 August 2020, 9:37 am
Quick Share

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளை கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆட்டிப்படைத்து பேரழிவை உருவாக்கி வருகிறது. இதில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் படுதீவிரமாக களமிறங்கி உள்ளன. இதில் ரஷ்யா அதிதீவிரமான முயற்சிகளை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என்று ரஷ்யா அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமது மகள்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் புதின் அறிவித்திருந்தார்.

தாம் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பூசியை சர்வதேச சந்தையில் பயன்படுத்தும் வகையில் Sputnik V என பெயரிட்டிருக்கிறது ரஷ்யா. இந்த தடுப்பூசியை பெற இந்தியா உட்பட 20 நாடுகள் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதனிடையே ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தங்களது தடுப்பூசியை பெற இந்தியா உட்பட 20 நாடுகள் ஆர்வமாக இருக்கின்றன. 100 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளுக்கு ஆர்டர் தர ஒப்பந்தம் செய்துள்ளன என தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தைக்காக இந்த தடுப்பூசிக்கு Sputnik V (ஸ்புட்னிக்-V) எனவும் ரஷ்யா பெயரிட்டிருக்கிறது.

இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த சூழலில், ஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.