மிகப்பெரிய அளவில் மக்களுக்கு விநியோகிக்க ரஷ்யா திட்டம்..! கொரோனா தடுப்பூசி குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

11 August 2020, 1:30 pm
corona_vaccine_updatenews360
Quick Share

உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகளுக்கு மத்தியில், ரஷ்யா தனது முதல் கொரோனா தடுப்பூசியை நாளை அறிமுகம் செய்ய உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தடுப்பூசி கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியது மற்றும் ஆகஸ்ட் 12 அன்று பதிவு செய்யப்படும் என்று துணை சுகாதார அமைச்சர் ஒலெக் கிரிட்னேவ் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒரு புதிய அறிக்கையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தடுப்பூசிகள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான நிதியை உறுதி செய்வதில் அரசாங்கம் தீவிரமாக செயலாற்றி வருவதாகவும், ரஷ்யர்களில் 60% பேர் வரை காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“ரஷ்ய அரசாங்கம் 2020-2021 இலையுதிர்கால-குளிர்கால தொற்றுநோய் பருவத்தில் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட நிகழ்வுகளுக்கு முழு நிதியுதவியை உறுதி செய்ய வேண்டும்.

ரஷ்ய மக்கள்தொகையில் 60 சதவிகிதம் வரை காய்ச்சல் தடுப்பூசியையும், 75 சதவிகிதம் வரை ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசியையும் அரசு முறையாக பதிவு செய்தவுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” ரஷ்யா அதிபரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அறிக்கையில், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதிக்கும் தன்னார்வலர்களின் இறுதி சோதனையில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டியது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் ஜூன் 18 அன்று தொடங்கியது மற்றும் அதில் 38 தன்னார்வலர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அவர்கள் அனைவரிடமும் மருந்து சரியாகச் செயல்பட்டு நோய்யெதிர்ப்புச் சக்தியை வழங்கியது. மேலும் சிறு சிறு ஒவ்வாமைகளைத் தவிர பெரிய அளவிலான பக்க விளைவுகள் எதுவும் இதனால் உருவாகவில்லை என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து நாளை முறையாக அறிவிக்கப்பட்ட பிறகு, செப்டம்பர் மாதத்திற்குள் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் தொடர் உற்பத்தியைத் ரஷ்யா திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக மந்திரி டெனிஸ் மந்துரோ, ஒட்டுமொத்த உற்பத்தியானது முதன்மையாக, சுகாதார அமைப்பின் தேவைகளைப் பொறுத்து திட்டமிடப்படும் எனத் தெரிவித்தார்.

அதோடு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா, மாதத்திற்கு பல மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளையும் தயாரிக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Views: - 1

0

0