சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய எதிர்கட்சித் தலைவர் கைது..! விமான நிலையத்தில் வைத்தே கைது செய்த அதிகாரிகள்..!

18 January 2021, 6:32 pm
alexei_navalny_updatenews360
Quick Share

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி ஜெர்மனியில் இருந்து மாஸ்கோவிற்கு வந்த உடன் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஜெர்மனியில் அவர் கடந்த ஆண்டு விஷம் உட்கொண்டதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியான ஒரு அறிக்கையில், ரஷ்யாவின் பெடரல் பெனிடென்ஷியரி சர்வீஸ், ஷெரெமெட்டீவோ சர்வதேச விமான நிலையத்தில் நவல்னியை தகுதிகாண் காலத்தின் நிபந்தனைகளை மீறியதற்காக அதன் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தகுதிகாண் காலத்தை மீறியும் ஆஜராகாததால் டிசம்பர் 29, 2020 அன்று அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜெர்மனியிலிருந்து திரும்பியவுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அவர் காவலில் இருப்பார் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் நவல்னியை கைது செய்து வைத்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

“மாஸ்கோ வந்ததும் அலெக்ஸி நவல்னியை கைது செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரை உடனடியாக விடுவிக்க ரஷ்ய அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“அவரை உடனடியாக விடுவிக்குமாறு ரஷ்ய அதிகாரிகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவரை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அழைக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் டேவிட் சசோலி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

“ரஷ்ய அதிகாரிகள் அலெக்ஸி நவல்னியின் உரிமைகளை மதித்து உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். நீதித்துறையை அரசியல்மயமாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் கூறியுள்ளார்.

ஜனவரி 25’ம் தேதி நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கவுன்சில் கூட்டத்திலும், இன்று தொடங்கும் ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என்று பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு ஐரோப்பிய யூனியனின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவும் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி நபரை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “நவல்னி மற்றும் பிற எதிர்க்கட்சி பிரமுகர்கள் மற்றும் ரஷ்ய அதிகாரிகளை விமர்சிக்கும் சுயாதீன குரல்களை மௌனமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த தடுப்புக்காவல் சமீபத்தியது.” என்று கூறினார்.

“தேர்தல் செயல்பாட்டில் போட்டியிட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பை வழங்குமாறு ரஷ்ய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அலெக்ஸி நவல்னி பிரச்சினை அல்ல. அவரது உடனடி மற்றும் நிபந்தனையற்ற விடுதலையை நாங்கள் கோருகிறோம்.” என்று பாம்பியோ மேலும் கூறினார்.

Views: - 0

0

0