இறுதிக் கட்ட சோதனையில் பல கொரோனா தடுப்பூசிகள்..! ஆனாலும் திருப்தியில்லை..! உலக சுகாதார அமைப்பு “ஷாக்” அறிவிப்பு..!

3 August 2020, 8:09 pm
who_updatenews360
Quick Share

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயஸ், உலகெங்கிலும் உள்ள பல கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இப்போது மருத்துவ பரிசோதனைகளின் 3’வது கட்டத்தில் உள்ளன என்றும், விரைவில் பல பயனுள்ள தடுப்பூசிகளை நாம் பெற முடியும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

“பல தடுப்பூசிகள் இப்போது கட்டம் -3 மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. விரைவில் தொற்றுநோயைத் தடுக்க உதவும் பல பயனுள்ள தடுப்பூசிகளைக் கொண்டிருப்போம் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். இருப்பினும், தற்போது எந்த மகிழ்ச்சியான அறிகுறியும் இல்லை. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் வரை ஒருபோதும் அவ்வாறான எண்ணம் இருக்கக்கூடாது.” என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 5 மடங்கு அதிகரித்துள்ளது மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

“உலகளவில் பாதிப்புகளின் எண்ணிக்கை 5 மடங்கிற்கும் மேலாக 17.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழு 3 மாதங்களுக்கு முன்பு கூடியதிலிருந்து இறப்புகளின் எண்ணிக்கை 6,80,000 ஆக மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.” என்று அவர் கூறினார்.

பல தடுப்பூசிகளின் ஆரம்ப சோதனை முடிவுகள் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளன. இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி, மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ளது மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது இந்த ஆண்டின் பிற்பகுதியில் பொது மக்களுக்கு கிடைக்கக்கூடும்.

இதில் ரஷ்யர்கள் ஒரு படி மேலே இருப்பதாகத் தெரிகிறது. ரஷ்யாவிலிருந்து வெளிவரும் அறிக்கைகள் மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மனித சோதனைகளை நிறைவு செய்துள்ளதாகவும் ஆகஸ்ட் 10-12 தேதிகளில் வெளியிடப்படலாம் என்றும் தெரிவிக்கின்றன.

இந்தியாவில், பாரத் பயோடெக் தயாரித்த தடுப்பூசி கோவாக்சினும் மனித சோதனைகளை தொடங்கியுள்ளன. மேலும் தன்னார்வலர்களுக்கு இப்போது தடுப்பூசி சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.