ஆன்லைனில் ஆர்டர் செய்தால் ரோபோ மூலம் டெலிவரி! சிங்கப்பூர் அசத்தல்

17 April 2021, 2:00 pm
Quick Share

ஆன்லைனில் ஆர்டர் செய்தால், மளிகை, பால் உள்ளிட்ட பொருட்களை, ரோபோக்கள் வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் முயற்சியை சிங்கப்பூர் எடுத்திருக்கிறது. இது நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், சிங்கப்பூரில் புதிய முயற்சியாக, பொருட்களை டெலிவரி செய்யும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அந்த பொருட்களை உங்கள் வீடு தேடி கொண்டு வந்து ரோபோக்கள் சேர்த்து விடும்.

ஓட்சாவ் என்ற நிறுவனம் கேமெல்லோ என பெயர் சூட்டப்பட்ட இரண்டு ரோபோக்களை இதற்காக வடிவமைத்து உள்ளது. 20 கிலோ வரையிலான பொருட்களை எவ்வித சேதமும் இல்லாமல், அவை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்துவிடும். பொருட்களை வைப்பதற்காக, ரோபோக்குள் இரு அறைகள் உள்ளன. 700 வீடுகள் கொண்ட குடியிருப்பில், சோதனை அடிப்படையில், இந்த ரோபோக்கள் பணி செய்து வருகின்றன.

முப்பரிமான சென்சார்கள், கேமராவை தனக்குள் கொண்டிருக்கும் இந்த ரோபோக்கள், தானாகவே இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருட்களை பெற்றுக்கொள்ளும் ரோபோக்கள், வீட்டை நோக்கி வரும் பாதை உள்ளிட்ட தகவல்கள், வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பப்பட்டு விடும். சனிக்கிழமை மட்டும் அரை நேரம் செயல்படும் இந்த ரோபோக்கள், வார நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பணி செய்கின்றன.

இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவு படுத்த, அதன் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

Views: - 41

0

0