இலங்கையில் அக்டோபர் 1 வரை பொது முடக்கம் நீட்டிப்பு:அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு

Author: Udhayakumar Raman
17 September 2021, 10:48 pm
Quick Share

இலங்கையில் கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த பொது முடக்க கட்டுப்பாடுகள் வரும் அக்., 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகளும் தீவிரமாக போராடி வருகின்றன. எனினும் அடுத்தடுத்த கொரோனா வைரஸ் அலைகளால் முன்பை விட தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை உலக நாடுகள் விதித்து வருகின்றன. அண்டை நாடான இலங்கையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாலும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாலும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், பொது முடக்கம் விரைவில் முடிவடைய இருந்ததை அடுத்து, தலைநகர் கொழும்புவில், மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன், அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆலோசனை நடத்தினார்.கூட்டத்திற்கு பிறகு, இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:- நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம், வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தினசரி கொரோனா பாதிப்புகள் 2 ஆயிரத்தைக் கடந்து வருவதால், மேற்கொண்டு தொற்று பரவாமல் இருக்க இந்த பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. விரைவில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும்.தினசரி கொரோனா பாதிப்புகள் 100க்கு கீழே குறைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Views: - 274

0

0