மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயம்…சாதனை படைத்த அமெரிக்க மருத்துவர்கள்: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மைல்கல்!!

Author: Aarthi Sivakumar
11 January 2022, 5:42 pm
Quick Share

அமெரிக்கா: இதய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிவிட்ட நபருக்கு பன்றியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இதயம் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலேண்டை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். வேறு இதயத்தை பொருத்தவிட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவர் இருந்தார். இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதனையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.

இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதல் முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது.

இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்திருப்பதால் சிறுநீரகம் போன்ற மற்ற பன்றியின் உறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும். உலகம் முழுவதும் உறுப்பு தானத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப்பெரும் தீர்வாக இருக்கும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

முன்னதாக, இந்தியாவில் இதேபோன்ற ஒரு அறுவை சிகிச்சை முறை, 24 ஆண்டுகளுக்கு முன்பே சோதனை செய்து பார்க்கப்பட்டது. அசாம் மாநிலத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் Dr.தனிராம்-பருவா, இதயக் கோளாறு உள்ள 32 வயது நபருக்கு பன்றியின் இதயத்தையும் நுரையீரலையும் மாற்றம் செய்தார். ஆனால், உடலில் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த நபர் ஒரு வாரம் கழித்து உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் பல இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம்-1994இன் கீழ் மருத்துவர் பருவா கைது செய்யப்பட்டு 40 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தை விசாரித்த அசாம் மாநில அரசு, இந்த மாற்று அறுவை சிகிச்சை சோதனை முறை “நெறிமுறையற்றது” என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 473

0

0