‘பார்க்கத்தான் சுள்ளான்’: 4 நாட்களில் 152 கிலோ ‘வால்நட்’…தீயாய் வேலை செய்த குட்டி அணில்..!!

Author: Aarthi Sivakumar
5 October 2021, 3:45 pm
Quick Share

பார்கோ: அமெரிக்காவில் அணில் ஒன்று ரகசியமாக 152 கிலோ வாதுமைக் கொட்டைகளை சேமித்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வடக்கு டொகோட்டா மாகாணம் பார்கோ நகரைச் சேர்ந்தவர் பிஸ்ச்சர். இவரது வீடருகே வால்நட் எனப்படும் வாதுமைக் கொட்டைகள் விளையும் மரங்கள் உள்ளன. கடந்த 2013ம் ஆண்டு முதல், இவரின் பழைய கார் எங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும் அதன் அடியில் வாதுமை கொட்டைகள் குவியலாக இருப்பதை கவனித்துள்ளார்.

latest tamil news

சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குளிர் காலம் துவங்குவதற்கு முன் இப்படி வாதுமைக் கொட்டைகள் சேர்வதும், அவற்றை பிஸ்ச்சர் அகற்றுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில், இவர் நான்கு நாட்கள் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அந்த காரில் இன்ஜின் உட்பட பல இடங்களில் ஏராளமான வாதுமைக் கொட்டைகள் கொட்டிக் கிடந்தன. இது யார் செய்த வேலை என துப்பறிந்த போது ஒரு சிவப்பு நிற அணில் தான் குளிர் கால சேமிப்பிற்காக, வாதுமைக் கொட்டைகளை காரில் சேமித்து வைக்கிறது என்பதை பிஸ்ச்சர் கண்டுபிடித்தார்.

latest tamil news

இதனையடுத்து, அணில் சேமித்த அந்த வாதுமைக் கொட்டைகளை ஏழு ‘பக்கெட்’களில் சேகரித்த அவர் சமூக ஊடகங்களில் அந்த படத்தை பதிவேற்றினார். அதில் ‘முதன் முறையாக நான்கு நாட்களில், 152 கிலோ வாதுமைக் கொட்டைகள் அதுவும் அணில் கையால் சேகரித்தது விற்பனைக்கு உள்ளது.

‘அயராது உழைத்தவர் உடல் சோர்ந்து ஓய்வெடுத்தால், வாதுமைக் கொட்டைகள் கிடைக்காது; உடனே வாங்கிச் செல்லவும்’ என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.

Views: - 873

0

0