3,80,000 வீடியோக்கள் நீக்கம்..! 1,300 கணக்குகள் முடக்கம்..! தடையை எதிர்கொள்ள டிக்டாக் அதிரடி நடவடிக்கை..!
21 August 2020, 10:36 amஇந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை, தனது வெறுக்கத்தக்க பேச்சு கொள்கையை மீறியதற்காக அமெரிக்காவில் 3,80,000’க்கும் மேற்பட்ட வீடியோக்களை டிக்டாக் நீக்கியுள்ளது. மேலும் டிக்டாக் செயலியானது வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தை பதிவிடும் 1,300’க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக டிக்டாக் செயலி வெளியிட்டுள்ள ஒரு வலைப்பதிவு இடுகையில், சீனாவின் பைட் டான்ஸுக்குச் சொந்தமான இந்த செயலி, இனம் சார்ந்த துன்புறுத்தல் போன்ற உள்ளடக்கத்தில் செயல்பட்டதாகவும், இது ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்புக் குழுக்கள் மற்றும் வன்முறை தொடர்பான உள்ளடக்கம் குறித்தும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ஆன்டி டீபேமேசன் லீக்கின் மதிப்பாய்வு, வெள்ளை மேலாதிக்க மற்றும் யூத-விரோத வெறுப்பு உரையை பரப்புவதற்கு வீடியோ தளம் பயன்படுத்தப்படுவதாகக் கூறியது. நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தியதற்காக இந்த செயலி, பலவற்றோடு சமீபத்தில் இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வழியைப் பின்பற்றி, தற்போது அமெரிக்காவும் டிக்டாக் செயலுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
டிக்டாக்கின் அமெரிக்க நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் வேறு ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் உத்தரவிட்டார். அது கையாளும் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இருப்பினும், டிக்டாக் சீனாவுக்கு ஒருபோதும் பயனர் தரவை வழங்கவில்லை என்றும் அவ்வாறு கேட்டாலும் தரமாட்டோம் எனக் கூறியுள்ளது.