உலக யானைகள் தினம்: சீண்டாத வரைக்கும் குழந்தை மனசு… வனங்களின் பெரிய வாரிசு..!!

Author: Aarthi Sivakumar
12 August 2021, 1:11 pm
Quick Share

யானைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக இன்று உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பெரிய கால்கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும் ‘மதம்’ பிடிக்கும் காலத்தை தவிர மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்டு அப்படியே நடக்கும். வயது வித்தியாசமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்த்து வியக்கும் ஒரு உயிரினம் இந்த யானைகள்.

நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசு பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் நடந்து செல்கின்றன. ஒரு பகுதியில் இருக்கும் விதையை மற்ற பகுதிக்கு பரப்புவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உள்ளது. இத்தகைய யானைகளின் குணாதிசய பண்புகள் சுவாரஸ்யமானவை.

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் அதிகபட்சமாக 70 ஆண்டுகள் வாழக்கூடியதும் ஆகும் . மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும்.

யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையில் உள்ளவைகளுமான சிங்கம் , புலி முதலியன கூட நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை.

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன.

இயற்கையாகவே பார்க்கும் திறன் குறைந்த யானைகள், தொடுதல், அருகில் இருப்பவற்றை பார்த்தல், சத்தம், ரகசியமாக சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனை போன்றவைகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கும் போது அதிக சத்தத்துடன் பிளிறும். ஒரு கி.மீ., வரை வாசம் பிடிக்கும் திறன் கொண்டவை.

காலை மற்றும் மாலை 4 மணிக்கு மேல் யானைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ. தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் அருந்தும். பொதுவாக யானைகள் நின்று கொண்டும், படுத்து கொண்டும் உறங்கும் தன்மை கொண்டவை. மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் எமோஷன் மையம் ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக கருதப்படுகிறது. ஞாபக சக்தி அதிகம்.

யானையின் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். தோலின் கடினத்தன்மை காரணமாக மற்ற இடங்களில் சுரக்காததால், உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள, ரத்தநாளங்கள் அதிகமுள்ள காதை ஆட்டிக் கொண்டே இருக்கும். இதன்மூலம் உடல் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும். மேலும், உடல் வெப்பத்தை குறைக்க, தன் மேல் தண்ணீரை தெளித்தல், மண்ணை போட்டுக் கொள்ளுதல், எச்சிலை விழுங்குதல் போன்றவற்றால் சமாளிக்கும்.

காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும். யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துக்களால் யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கோவை, சத்தியமங்கலம், நீலகிரி,கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் யானைகள் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. யானை ஆராய்ச்சியாளர்கள் பலரிடம் திரட்டிய தகவல் படி 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரத்து 13 யானைகள் இறந்து உள்ளன. 427 ஆண் யானைகள், 575 பெண் யானைகள், அழுகிய நிலையில் உடல் கண்டறியப்பட்டதால் பாலினம் கண்டுபிடிக்க முடியாத யானைகளின் எண்ணிக்கை 16 என யானைகள் இறந்து உள்ளன.

காடுகள் உருவாக ஆதாரமாக உள்ள யானைகள் பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். உலக யானைகள் பாதுகாப்பு தினத்தன்று தாவர உண்ணிகளுக்கும், மற்ற விலங்குகளுக்கும் உறுதுணையாக இருக்கும் யானைகளை பாதுகாப்பதில் நமது பங்கை அளிப்போம், இதன் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யாமல் யானைகளை பாதுகாப்போம் என்று உறுதி மொழி ஏற்போம்.

Views: - 557

0

0