இன்று தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: இந்திய கொடியை ஏந்திச் செல்கின்றனர் மேரிகோம், மன்பிரீத் சிங்..!!

By: S
23 July 2021, 9:09 am
Quick Share

டோக்கியோ: உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகின்றன. டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக, ஒலிம்பிக் தொடர் முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடக்க விழாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. குறைந்த அளவில் மிகமிக முக்கிய விருந்தினர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

“முன்னேறி செல்வோம், உணர்வால் இணைவோம்” என்ற தலைப்பின் கீழ் சுமார் 4.30 மணி நேரம் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ போட்டிகளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து ஜப்பான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பெரும்பாலான நிகழ்ச்சிகள் முன்னதாக பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்படுகின்றன. ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வீரர் யார் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த ஒலிம்பிக் போட்டிகளைப் போன்று, அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகள் இம்முறை அணிவகுப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை. இந்திய அணி சார்பில் 20 வீரர், வீராங்கனைகளே பங்கேங்கின்றனர்.


இதுவரை இல்லாத அளவாக, நாடுகளின் கொடிகளை ஏந்தி செல்வதற்கு இம்முறை இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணியின் வீரர் மன்ப்ரீத் சிங் ஆகியோர் இந்தியாவின் மூவண்ண கொடியை ஏந்தி செல்கின்றனர்.

வழக்கமாக ஆங்கில அகர வரிசைப்படி நாடுகள் அணி வகுக்கும் நிலையில், இம்முறை ஜப்பானிய அகர வரிசைப்படியே நாடுகள் அணிவகுக்கப் போகின்றன. 33 போட்டிகளில் 339 தங்கப் பதக்கங்களுக்காக 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் 18 போட்டிகளில் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதன்முறையாக நியூசிலாந்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் பங்கேற்கிறார்.

கொரோனா காரணமாக, ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பதக்க அணிவகுப்பின்போது வீரர்கள் பதக்கங்களை தாங்களாகவே எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில், வழக்கமான ஆரவாரங்கள் ஏதும் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான ஒலிம்பிக்காக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

Views: - 222

0

0