தேர்தல் பாதுகாப்பாக நடந்ததாக் கூறிய அதிகாரி..! பதவியை விட்டு துரத்திய டிரம்ப்..!

18 November 2020, 2:46 pm
Christopher_Krebs_UpdateNews360
Quick Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் நவம்பர் 3 ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல் என்று கூறிய உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கியுள்ளார்.

பெரிய அளவிலான வாக்காளர் மோசடி மற்றும் தேர்தல் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டிய டிரம்ப், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் (சிஐஎஸ்ஏ) இயக்குனர் கிறிஸ்டோபர் கிரெப்ஸை நீக்கியதாக ட்விட்டரில் அறிவித்தார்.

“2020 தேர்தலின் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸின் சமீபத்திய அறிக்கை மிகவும் தவறானது. அதில் இறந்தவர்கள் வாக்களித்தல், வாக்குப்பதிவு பார்வையாளர்கள் வாக்குச் சாவடிகளில் அனுமதிக்கப்படவில்லை. வாக்களிக்கும் இயந்திரங்களில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பெரிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இருந்தன.” என டிரம்ப் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

எனவே, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், கிறிஸ் கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பொறுப்பிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

தேர்தலைப் பற்றிய பாதுகாப்பான ஒரே விஷயம், அது வெளிநாட்டு சக்திகளால் வெல்ல முடியாதது மட்டுமே என்று டிரம்ப் கூறினார்.

தேர்தல் முடிவுகள் டிரம்புக்கு எதிராக வந்ததாகக் கூறப்படும் நிலையில், டிரம்ப் இதுவரை தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தேர்தலில் தான் தான் வென்றேன் என்றும் உறுதியாகக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.