முகநூல், ட்விட்டரை தொடர்ந்து யூடியூப் நடவடிக்கை: ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கம்..!!

13 January 2021, 1:46 pm
trumph in hard - updatenews360
Quick Share

வாஷிங்டன்: முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தேர்தல் வெற்றி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6ம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த வரலாற்றுமிக்க கலவரத்தில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் போலீஸ் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. ஜோ பைடன் வரும் ஜனவரி 20ம் தேதி பதவி பிரமாணம் செய்யவுள்ள நிலையில், அதே நாளில் மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் வன்முறை தொடர்பாக சமூகவலைதளமான ட்விட்டரில் பல்வேறு கருத்துக்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வந்த 70,000க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக டுவிட்டர் நிறுவனம் முடக்கியது. கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை யூடியூப் நிறுவனம் நீக்கியது. வன்முறையை தூண்டும் வகையிலும், விதிகளுக்கு புறம்பாக இருந்ததாகவும் அதனை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.

ட்விட்டர், முகநூல், இன்ட்ஸ்டாகிராமைத் தொடர்ந்து தற்போது யூ டியூப் நிறுவனமும் டிரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.