கார் பார்க்கிங்கில் தூங்கிய அமெரிக்கா பாதுகாப்பு படை வீரர்கள்: மன்னிப்பு கோரிய பைடன்..!!

23 January 2021, 4:33 pm
soldiers - updatenews360
Quick Share

வாஷிங்டன்: ஜோ பைடன் பதவியேற்புக்காக அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் குவிக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புப் படையினர், அருகில் உள்ள அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் தூங்க நேர்ந்த சம்பவத்திற்கு ஜோ பைடன் மன்னிப்பு கோரியுள்ளார்.

பைடன் பதவியேற்புக்காக அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேப்பிடலில் குவிக்கப்பட்ட நேஷனல் கார்டு எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையினர், அந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் தூங்கும் புகைப்படம் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன் அந்தப் படைத் தலைவருக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார்.

இம்மாத தொடக்கத்தில் கேபிட்டல் கட்டடத்தில் அப்போதைய அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பைடன் பதவியேற்பை ஒட்டி ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடக்கலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை அளித்திருந்தது. இதையடுத்து, பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது வாஷிங்டன் டி.சி.யில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கேப்பிட்டல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற பிறகு, கேப்பிட்டல் கட்டடத்துக்கு அருகில் உள்ள அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் படுத்து உறங்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

சில அரசியல் தலைவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து கோபப்பட்டனர். சில மாநில ஆளுநர்கள் துருப்புகளை திரும்ப அழைத்தனர். இதையடுத்து, நேஷனல் கார்டு பீரோ தலைவரை அழைத்த அதிபர் பைடன் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என்றும் அவரிடம் கேட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதல் சீமாட்டி என அழைக்கப்படும் அதிபரின் மனைவி ஜில் பைடன் படையினர் சிலரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் இருந்து அவர்களுக்காக கொண்டுவந்த பிஸ்கட்டை பரிசளித்தார். “என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன்,” என்று அவர் கூறினார்.

கார் பார்க்கிங்கில் சில பாதுகாப்புப் படையினர் உறங்க நேர்ந்த புகைப்படத்தைப் பார்த்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களே விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0