அமெரிக்க பாணிக்கு மாறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்..! திறமையானவர்களை ஈர்க்க குடியுரிமை வழங்கும் திட்டம் தொடக்கம்..!

30 January 2021, 9:22 pm
uae_flag_updatenews360
Quick Share

திறமையானவர்களை ஈர்க்கும் நோக்கத்துடன், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற நிபுணர்களுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கும் சட்ட திருத்தங்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்று ஒப்புதல் அளித்தது.

ஒரு ட்வீட்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், “முதலீட்டாளர்கள், சிறப்பு திறமைகள் உடையவர்கள் மற்றும் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளிட்டவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் சட்ட திருத்தங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எங்கள் வளர்ச்சி பயணத்திற்கு பங்களிக்கும் திறமைகளை ஈர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை, உள்ளூர் எமிரி நீதிமன்றங்கள் மற்றும் செயற்குழுக்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட தெளிவான அளவுகோல்களின் கீழ் குடியுரிமை பெற தகுதியுள்ளவர்களை பரிந்துரைக்கும் என்றும் அவர் கூறினார்.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட்டைப் பெறுபவர்களுக்கு அவர்களின் தற்போதைய குடியுரிமையை வைத்திருக்கவும் சட்டம் அனுமதிக்கிறது.” என்று அவர் கூறினார்.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, எமிரேட்ஸ் குடியுரிமையை எதிர்பார்க்கும் கண்டுபிடிப்பாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொருளாதார அமைச்சகம் அல்லது வேறு எந்த புகழ்பெற்ற சர்வதேச அமைப்பினாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற வேண்டும் மற்றும் பொருளாதார அமைச்சகத்தின் பரிந்துரை கடிதத்தையும் பெற வேண்டும்.

இதற்கிடையில், அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் போன்ற படைப்பு திறன்களைக் கொண்டவர்கள் தங்கள் துறைகளில் முன்னோடிகளாகவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றவர்களாகவும் இருக்க வேண்டும். தொடர்புடைய அரசு நிறுவனங்களின் பரிந்துரை கடிதமும் கட்டாயமாகும்.

குடியுரிமை பெற முதலீட்டாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சொத்தை வைத்திருக்க வேண்டும்.

Views: - 0

0

0

1 thought on “அமெரிக்க பாணிக்கு மாறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்..! திறமையானவர்களை ஈர்க்க குடியுரிமை வழங்கும் திட்டம் தொடக்கம்..!

Comments are closed.