உய்குர் முஸ்லீம் பெண்கள் மீது திட்டமிட்ட பாலியல் துஷ்பிரயோகம்..! சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை..!

4 February 2021, 1:46 pm
uighurs_china_updatenews360
Quick Share

சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற முஸ்லீம்களுக்கான தடுப்பு முகாம்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான அறிக்கைகளால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அங்கு நிகழும் அட்டூழியங்களுக்கு கடுமையான விளைவுகள் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

முகாம்களில் உள்ள பெண்கள் கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக நேற்று பிரபல ஆங்கில ஊடகத்தில் ஒரு அறிக்கை வெளியான நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

ஆங்கில ஊடகத்தில் வெளியான அறிக்கையில், தாங்கள் அனுபவித்த அல்லது வெகுஜன கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றின் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பின் ஆதாரங்களைக் கண்டதாக பல முன்னாள் கைதிகள் மற்றும் ஒரு காவலர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்துக் கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், “ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற முஸ்லீம்களுக்கான தடுப்பு முகாம்களில் பெண்களுக்கு எதிரான திட்டமிட்ட கற்பழிப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முதல் சாட்சியம் உள்ளிட்ட அறிக்கைகளால் நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.” எனக் கூறினார்.

ஜின்ஜியாங்கில் சீனா உய்குர் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்வதாக கூறும் அமெரிக்காவின் முந்தைய குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்திய செய்தித் தொடர்பாளர், சீனா மேற்கொள்ளும் இந்த அநீதிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச பார்வையாளர்களின் உடனடி மற்றும் சுயாதீன விசாரணைகளை சீனா அனுமதிக்க வேண்டும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Views: - 22

0

0