பாகிஸ்தான் தான் இந்தியாவோடு பேசி தீர்வு காண வேண்டும்..! காஷ்மீர் விவகாரத்தில் விலகி நிற்கும் பிரிட்டன்..!

14 January 2021, 5:12 pm
Modi_Imran_Khan_UpdateNews360
Quick Share

பிரெக்சிட்டிற்குப் பிறகு, பிரிட்டனின் மிகப்பெரும் பொருளாதார நட்பு நாடாக இந்தியா மாறியுள்ள நிலையில், காஷ்மீர் விவகாரம் போன்ற இந்தியாவின் உள் விஷயங்களில் தலையிடுவதன் அபாயங்களை புரிந்து கொண்டுள்ள பிரிட்டன், இதிலிருந்து விலகி நிற்க முயல்வது அதன் நடவடிக்கைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

விளைவுகளை மனதில் வைத்து, பிரிட்டன் அரசாங்கம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களுக்குள் பேசுவதன் மூலமே உருவாகும் என்றும், அவற்றில் பிரிட்டன் தலையிடக்கூடாது என்ற தனது மாறாத நிலைப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்தியது.

‘காஷ்மீரின் அரசியல் நிலைமை’ குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரிட்டனின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (எஃப்.சி.டி.ஓ) அமைச்சர் நைகல் ஆடம்ஸ் கூறுகையில், அங்கு எல்லையின் இருபுறங்களிலும் மனித உரிமை மீறல் புகார்கள் இருந்தாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரு தரப்பு விஷயத்தில் தலையிடுவது நல்லதல்ல என்று கூறினார்.

“காஷ்மீர் பிரச்சினையில் அரசாங்கத்தின் கொள்கை நிலையானது. அது மாறாது. சிம்லா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, காஷ்மீர் மக்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு, நீடித்த அரசியல் தீர்மானத்தைக் கண்டறிய வேண்டியது இந்தியாவும் பாகிஸ்தானும் தான் என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம். பிரிட்டன் அரசு ஒரு தீர்வை பரிந்துரைப்பது பொருத்தமானதல்ல அல்லது இந்த விஷயத்தில் ஒரு மத்தியஸ்தராக செயல்பட முடியாது.” என ஆடம்ஸ் கூறினார். அவர் பிரிட்டனின் ஆசிய அமைச்சராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2020 டிசம்பரில் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தல்களை குறிப்பிட்ட ஆடம்ஸ், உள்ளூர் வாக்காளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரை நியாயமான தேர்தல் பங்களிப்பு செயல்முறைக்கு ஈர்த்ததை வரவேற்றார்.

370’வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் விடுவிக்கப்பட்டதையும் அவர் வரவேற்றார்.

பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவு எம்பிக்கள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட பிரிட்டன் அரசுக்கு அழுத்தம் கொடுத்தாலும், இந்திய எதிர்ப்பு தனக்கு பாதகமாகவே முடியும் என்பதை உணர்ந்துள்ள பிரிட்டன் அரசு, தொடர்ந்து இந்திய சார்புநிலையை வலுவாக தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0