இந்தியாவுக்கு ₹16 லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள அமெரிக்கா..! அமெரிக்க பாராளுமன்றத்தில் தகவல்..!

27 February 2021, 12:35 pm
USA_Dollar_UpdateNews360
Quick Share

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா திகழ்ந்தாலும் உலக அளவில் அதிக கடன் வைத்துள்ள நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா தான் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனே 216 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹16 லட்சம் கோடி) கடன்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஒட்டுமொத்த கடன் தற்போது 29 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் நிலையில், ஒரு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டுக் கடனில் அதிக அளவு சீனாவிடமும் அதற்கு அடுத்த படியாக ஜப்பானும் இருப்பதால், கடன் வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு ஜோ பிடென் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், அமெரிக்க தேசியக் கடன் 23.4 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அதாவது ஒரு நபருக்கு 72,309 அமெரிக்க டாலர் கடனாக இருந்தது.

“நாம் அமெரிக்காவின் கடனை 29 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்க்கப் போகிறோம். இது ஒரு குடிமகனுக்குக் கொடுக்க வேண்டிய கடனாகும். கடன் எங்கு செல்கிறது என்பது குறித்து ஏராளமான தவறான தகவல்கள் உள்ளன. நாம் கடன்பட்டிருக்கும் முதல் இரண்டு நாடுகள் சீனா மற்றும் ஜப்பான், நமது நண்பர்களிடம் அல்ல.” என்று அமெரிக்க காங்கிரஸ்காரர் அலெக்ஸ் மூனி கூறினார்.

“நாம் எப்போதுமே சீனாவுடன் உலகளாவிய போட்டியில் இருக்கிறோம். அவர்கள் நமக்கு நிறைய கடன்களை கொடுத்துள்ளார்கள். நாம் சீனாவிற்கு மட்டுமே 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக கடன்பட்டிருக்கிறோம், ஜப்பானுக்கும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்று மேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் கூறினார். அவரும் மற்றவர்களும் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சமீபத்திய ஜோ பிடென் நிர்வாகத்தின் நிதி ஊக்கத் திட்டத்தை எதிர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் கொரோனா வைரஸ் நிவாரண நிதித் திட்டத்தை தொற்றுநோயிலிருந்து சமாளிக்க, சராசரி அமெரிக்கர்களுக்கு நேரடி நிதி உதவி, வணிகங்களுக்கு ஆதரவு மற்றும் தேசிய தடுப்பூசி திட்டத்திற்கு ஊக்கமளித்தல் உள்ளிட்டவற்றிற்கு அறிவித்தார்.

“நாம் திருப்பிச் செலுத்த வேண்டிய பணத்தை நமக்கு கடனாகக் கொடுக்கும் நபர்கள் நமது எண்ணத்தைப் புரிந்துகொள்ளும் நமது நண்பர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பிரேசிலுக்கு 258 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்பட்டிருக்கிறோம். இந்தியாவுக்கு நாம் 216 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்பட்டிருக்கிறோம். மேலும் அந்த கடன் பட்டியல் மிக நீளமாகச் செல்கிறது.” என்று அலெக்ஸ் மூனி கூறினார்.

அமெரிக்காவின் தேசிய கடன் 2000’ஆம் ஆண்டில் 5.6 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா நிர்வாகத்தின் போது தான் அமெரிக்க அரசின் கடன் மளமளவென்று உயர்ந்து இரட்டிப்பாகியது.

“ஒபாமா ஜனாதிபதியாக இருந்த எட்டு ஆண்டுகளில் நமது தேசிய கடனை இரட்டிப்பாக்கினோம். மேலும், கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து முற்றிலும் கட்டுப்படுத்தப்படாத ஒரு அமைப்பு இங்கே திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸ் தேசிய கடன் பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும்.” என்று அவர் அமெரிக்க காங்கிரஸின் இதர உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.

“எதிர்காலத்தை கருத்தில் கொள்ளுமாறு எனது சகாக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அரசாங்கத்திடம் பணம் இல்லை. மேலும் இவற்றில் பெரும்பாலானவை எப்படியும் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு செல்லப்போவதில்லை.” என்று அவர் கூறினார்.

கடன் விஷயங்கள் முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டன என்று அமெரிக்க காங்கிரசில் அலெக்ஸ் மூனி கூறினார்.

2050’க்குள் கூடுதலாக 104 டிரில்லியன் அமெரிக்க டாலர் கடனில் சேர்க்கப்படும் என்று அமெரிக்க காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிடுகிறது.

காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் கடன் 200 சதவீதம் உயரும் என்று கணித்துள்ளது.

“இன்று, நான் இப்போது இங்கே நிற்கும்போது, ​​நம்மிடம் 27.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் தேசியக் கடன் உள்ளது. இது உண்மையில் இங்கே ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் 84,000 அமெரிக்க டாலர் கடனை விட சற்று அதிகம்” என்று மூனி கூறினார்.

“நாங்கள் உண்மையில் ஒரு வருடத்தில் ஒரு நபருக்கு 10,000 அமெரிக்க டாலர் கடன் வாங்கியுள்ளோம், அதாவது, கடன் வாங்குவது நமது கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது.” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் கடன் அதிக அளவில் உயர்ந்து வரும் நிலையில், நிச்சயம் வெகுவிரைவில், கடனால் அமெரிக்கா கடும் சிக்கலை எதிர்கொள்ளும் என அமெரிக்கர்களில் பலர் அஞ்சுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 161

1

0