துருக்கி அதிபரின் மனைவியை சந்தித்த அமீர் கான்..! வைரலாகும் புகைப்படம்..! வலுக்கும் எதிர்ப்புகள்..!

17 August 2020, 4:38 pm
Aamir_Khan_Emine_Erdogan_UpdateNews360
Quick Share

துருக்கி அதிபர் எர்டோகனின் மனைவியான எமீன் எர்டோகனுடன், அமீர் கான் சந்தித்த புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து, விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.), நடிகர் அமீர்கானை கடுமையாக விமர்சித்துள்ளது. அமீர் கான் தனது வரவிருக்கும் லால் சிங் சத்தா படத்தின் படப்பிடிப்பை முடிக்க தற்போது துருக்கியில் உள்ளார். 

வி.எச்.பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், “முதல் துருக்கிய பெண்மணி எமீன் எர்டோகனுடன் அமீர் கானின் சந்திப்பு, இந்தியாவில் சில நடிகர்கள் இந்தியாவை எதிர்க்கும் நாடுகளை நோக்கி சாய்ந்திருப்பதைக் காட்டுகிறது” என்று கூறினார்.

துருக்கியின் முதல் பெண்மணி எமீன் எர்டோகன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நடிகர் அமீர் கானுடன் சந்தித்த படங்களை பகிர்ந்து கொண்டார். அந்த ட்விட்டர் பதிவில், “அமீர் தனது சமீபத்திய திரைப்படமான லால் சிங் சத்தா படப்பிடிப்பை துருக்கியின் பல்வேறு பகுதிகளில் எடுக்க முடிவு செய்ததை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் அதை எதிர்நோக்குகிறேன்.” எனக் கூறியிருந்தார்.

அயோத்தியில் பூமி பூஜை விழாவுக்குப் பிறகு துருக்கி தொடர்பாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் அளித்த அறிக்கைகளுடன், அமீர்கானை எமீன் எர்டோகன் சந்தித்ததையும் வி.எச்.பி ஒப்பிட்டுள்ளது.

“இந்தியாவில் புகழ் பெற்ற நடிகர்கள் இப்போது இந்திய எதிர்ப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்த பின்னர் பெருமிதம் கொள்கிறார்கள். அமீர் கானின் இந்தச் செயலால் நாட்டு மக்கள் காயமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அமீர்கான் வெளியே வந்து இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.” என்று வினோத் பன்சால் ஒரு அறிக்கையில் கூறினார்.

எமீன் எர்டோகனுடனான அவரது படங்கள் வைரலாகிவிட்டதால், சமூக ஊடக பயனர்கள் அமீர் கானை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். இந்திய அரசாங்கத்தின் 370’வது பிரிவை அகற்றிய பின்னர் துருக்கி இந்தியாவை எதிர்த்து நிற்கிறது என்றும் அமீர்கான் துருக்கிய முதல் பெண்மணியை சந்தித்திருக்கக்கூடாது என்றும் பல பயனர்கள் கருத்து தெரிவித்தனர்.

பரவலான கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்ததை அடுத்து லால் சிங் சத்தா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பக்கம் பாகிஸ்தானை அரபுலகம் தனித்து விட்டு இந்திய ஆதரவு நிலைக்கு மாறியுள்ள சமயத்தில், தனது பழம்பெருமை வாய்ந்த துருக்கிய கலீபா சாம்ராஜ்யத்தை தெற்காசியாவில் நிலைநிறுத்த பாகிஸ்தானை பகடைக்காயாக பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் துருக்கிய உளவாளிகள் இந்த நோக்கத்தில் செயலாற்றி வருவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போதைய அமீர் கான் மற்றும் எமீன் எர்டோகன் சந்திப்பு அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது.

Views: - 30

0

0