வியன்னாவில் 6 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கரவாத தாக்குதல்..!

3 November 2020, 10:17 am
vienna_terror_attack_updatenews360
Quick Share

வியன்னாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நேற்று இரவு அமலாவதற்கு சற்று நேரம் முன்பு திடீரென கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது பயங்கரவாதத் தாக்குதல் என்று அதிகாரிகள் கூறியதோடு, இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் உட்பட குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

“ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஒரு மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் பலியாகிறோம். அது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது” என்று ஆஸ்திரியாவின் அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் துப்பாக்கிச் சூடு வெடித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

“பயங்கரவாதிகளில் ஒருவர் வீழ்த்தப்பட்டுள்ளார். ஆனால் பலர் இன்னும் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் தானியங்கி ஆயுதங்களுடன் மிகச் சிறப்பாக திட்டமிட்டு தாக்குதலை தொடுத்துள்ளனர்.” என அவர் மேலும் கூறினார்.

சமூக ஊடகங்களில் வெளியான சில வீடியோக்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் தெருக்களில் நடந்து செல்வதைக் காட்டியது. மக்களை சீரற்ற முறையில் சுட்டுக் கொன்று, பலரைக் காயப்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இது யூத விரோத தாக்குதல் என்பதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று குர்ஸ் கூறினார். வியன்னாவின் பிரதான ஜெப ஆலயத்திற்கு வெளியே இந்த தாக்குதல் நடந்ததால் ஜெப ஆலயம் மூடப்பட்டது.

உள்துறை மந்திரி கார்ல் நெஹம்மர், பயங்கரவாதிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான கனரக ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் நகரத்தின் முக்கிய இடங்களை பாதுகாக்க இராணுவம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். வியன்னாவில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே தங்கி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தினார். மேலும் இன்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களை அறிவுறுத்தியுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைக் கொன்றதற்காக குர்ஸ் போலீசை பாராட்டினார்: “பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படுவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், இந்த தாக்குதல்களை எதிர்த்து எல்லா வகையிலும் போராடுவோம்” என்று உறுதியுடன் கூறினார்.

வியன்னா மேயர் மைக்கேல் லுட்விக் கூறுகையில், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏழு பேர் பலத்த காயங்களுடன் உள்ளதாகவும் கூறினார்.

இதற்கிடையே வியன்னாவில் உள்ள யூத சமூகத்தின் தலைவரான ஒஸ்கர் டாய்ச், பிரதான ஜெப ஆலயம் குறிவைக்கப்பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

ரப்பி ஸ்க்லோமோ ஹாஃப்மீஸ்டர் தனது ஜன்னலுக்கு கீழே உள்ள தெருவில் உள்ள மதுக்கடைகளில் வெளியே அமர்ந்திருக்கும் நபர்களை சுட்டுக் கொன்றதைக் கண்டதாகக் கூறினார்.

இதற்கிடையே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தாக்குதலை சமீபத்தில் எதிர்கொண்டு வரும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரன் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், பிரெஞ்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரிய மக்களின் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

“பிரான்சுக்குப் பிறகு, நட்பு நாடான ஆஸ்திரியா தாக்கப்பட்டுள்ளது. இது நமது ஐரோப்பா. நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சமீபத்திய வாரங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட மூன்று தாக்குதல்களை பிரான்ஸ் தாங்கிக்கொண்டது. இந்த தாக்குதல்கள் அனைத்தும் அந்த நேரத்தில் ஆஸ்திரியாவின் அதிபரால் கடுமையாக கண்டனம் செய்யப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்க இஸ்லாமிய பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலாக இது உள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 24

0

0

1 thought on “வியன்னாவில் 6 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கரவாத தாக்குதல்..!

Comments are closed.